அதிரடி முடிவு
ரசிகர்களின் நலன் கருதி ஐபிஎல் நிர்வாகம்
அதிரடி முடிவு எடுத்துள்ளது. தகுதி சுற்று போட்டிகள் முடிந்து ப்ளே ஆப் மற்றும்
இறுதி போட்டி நடைபெறும் நேரத்தை மாற்றி அமைத்துள்ளது.
பிளே ஆஃப்
முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி
பெறும். இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்காக இரண்டு தகுதி சுற்று போட்டிகள்
நடைபெறும். புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், முதல் ப்ளே ஆப் போட்டியில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி
போட்டிக்கு தகுதி பெறும்.
எலிமினேட்டர்
புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது
இடங்களில் இருக்கும் அணிகள், எலிமினேட்டர் எனப்படும் இரண்டாவது ப்ளே ஆப் சுற்றில்
மோதும். இதில் வெற்றி பெறும் அணிக்கும், முதல் ப்ளே ஆப் சுற்றில்
தோல்வியடைந்த அணிக்கும் இடையே மூன்றாவது ப்ளே ஆப் சுற்று போட்டி நடைபெறும். இதில்
வெற்றி பெறும் அணி பைனல்ஸ்க்கு தகுதி பெறும்.
நாக் அவுட்
இறுதி போட்டிக்கு முன்னதாக, இரண்டு ப்ளே
ஆப் மற்றும் ஒரு எலிமினேட்டர் போட்டி என மூன்று நாக் அவுட் போட்டிகள் நடைபெறும்.
இந்த மூன்று நாக் அவுட் போட்டிகள் மற்றும் இறுதி போட்டி ஆகியவற்றின் நேரம்
மாற்றப்பட்டுள்ளது.
நேரம் மாற்றம்
போட்டிகள் வழக்கமாக இரவு 8 மணிக்கு
தொடங்கி நடைபெறுகின்றன. ஆனால் நாக் அவுட் போட்டிகள் மற்றும் இறுதி போட்டி ஆகிய 4
போட்டிகளும் 8 மணிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்கும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
எதற்காக?
ஐபிஎல் போட்டிகள் 8 மணிக்கு
தொடங்குவதால், முடிவடைய இரவு 11.30 மணிக்கு
மேல் ஆகிவிடுகிறது. அதனால் ஐபிஎல் ரசிகர்கள், இரவு தாமதமாக
தூங்க செல்லும் நிலை உள்ளது. ரசிகர்களின் கோரிக்கை மற்றும் நலன் கருதி பிளே ஆஃப்
மற்றும் இறுதி போட்டிகள் 8 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம்
முன்னதாக 7 மணிக்கு தொடங்கப்படும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ்
சுக்லா தெரிவித்துள்ளார்.
இதே போல் புனேவில் நடக்க இருந்த பிளே ஆஃப்
போட்டிகள், அண்மையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு ஐபிஎல் நிர்வாகம் மாற்றியது குறிப்பிடத்தக்கது.