-->

தர்பூசணி பழத்தை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளும் அதன் தன்மையும்


தர்பூசணி

கோடைகாலம் வந்துவிட்டால் தெருவுக்கொரு தர்பூசணிக்கடை முளைத்துவிடும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்துக்குள் தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி விற்பனைக்கு வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.

 தர்பூசணி கோடையில் அனைவரையும் குளிரவைக்கும் பழம். வெயிலில் காய்ந்து போய் வருபவர்களுக்கு தன் குளுமையினால் களைப்பாற்றும் ஒரு சிறந்த கனி.

தர்பூசணியைப் பொறுத்தவரை சிறிய பழத்தில் சுவை இருக்காது என்று தூக்க முடியாத அளவுக்கு பெரிய பழமாகப் பார்த்து வாங்குவோம்.ஆனால் உண்மையிலேயே பெரிய சைஸ் பழங்களைவிட சிறிய சைஸ் பழங்கள்தான் சுவை அதிகமாக இருக்கும்.

வெயில் காலத்தில் தர்பூசணி உடலுக்குக் குளிச்சி தரக்கூடியது.வெயிலால் ஏற்படும் அனைத்து வகையான உடல் மற்றும் சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு உண்டு.

இதிலுள்ள பீட்டா கரோட்டின் , உடலால் வைட்டமின் ஏ வாக மாற்றப்படும்.  இது முடி மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது. இதன் பட்டையைச் சாப்பிட்ட பிறகு தூக்கி எறியாமல், தோலில் தடவலாம். இதில் பாக்டீரியாத் தொற்று மற்றும் அலர்ஜிக்கு எதிரான தன்மை உள்ளது. முகப்பரு பிரச்னைக்கும் இது நல்ல தீர்வு தரும்.

சிறுநீரகக் கற்களை கரைக்கும். கல்லீரலை சுத்தப்படுத்தும். பித்தத்தைப் போக்கும், சிறுநீர் எரிச்லை போக்கும், நாக்கு வறட்சியை உடனே போக்கும், இயற்கையான குளுக்கோஸ் இதில் அதிகம்.

சரும பொலிவுக்கும் ,முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது
இதயத்தை பலப்படுத்தும்.எலும்பு மற்றும் மூட்டுவலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். சருமப் பொலிவுக்கும் தலைமுடி பொலிவுக்கும் நல்லது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பயப்படாமல் சாப்பிடலாம்.

தர்பூசணிச் சாறு அரை கப், கடலை மாவு அரை கப், கஸ்தூரி மஞ்சள்தூள் – 2 தேக்கரண்டி கலந்து, சோப்புக்குப் பதிலாக இதைப் பயன்படுத்தி பாதம் முதல் உச்சிவரை 5 நிமிடங்கள் மிருதுவாக மசாஜ் செய்து குளிக்கவும். உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

 ஓட்ஸ் பவுடர் அரை கப், தர்பூசணிச் சாறு ஒரு கப், பச்சைக் கற்பூரம் பவுடர் – 2 சிட்டிகை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை வெளியே செல்லும் முன் ஃபேஸ்பேக் போல போட்டுக்கொண்டு, சிறிது நேரம் கழித்து முகம் கழுவிவிட்டுச் சென்றால், சருமத் தொல்லைகள் வராமல் தடுக்கும்,முகத்தை பளபளப்பாக்கும்.முகப்பரு வராமல் தடுக்கும்.

25 கிராம் வெட்டிவேர், ரோஜா – 5 பூக்களின் இதழ்கள், வேப்பந்தளிர் – 4, வெந்தயத் தூள் – 25 கிராம், பூலாங்கிழங்கு – 25 கிராம், தர்பூசணிச் சாறு ஒரு கப் எடுத்து அரைக்கவும். வியர்வை அதிகம் வெளியேறும் பகுதிகளில் தடவி, காய்ந்ததும் குளிக்கவும். இதனால் வியர்வையினால் வரும் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.

வெள்ளரிக்காய் – 2 பீஸ், தர்பூசணி – 2 பீஸ், ஒரு தேக்கரண்டி பால் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து, கண்களைச் சுற்றி பேக் போடவும். 10 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வெடுக்கவும். பிறகு கழுவினால், வெயிலால் ஏற்படும் கண் எரிச்சல் நீங்கி, புத்துணர்வை உணரலாம்.

இளநீர் கால் கப், தர்பூசணிச் சாறு கால் கப், கஸ்தூரி மஞ்சள் – 4 தேக்கரண்டி எடுத்துக் கலந்து கால், முழங்கை, கழுத்துப் பகுதிகளில் பூசிக் கழுவினால் வெயில், வியர்வையால் உடல்,கை,கால்,கருப்படைவதைத் தவிர்க்கலாம்.

 புதினா இலைப் பொடியுடன் தர்பூசணி சாறு சேர்த்து முகத்தில் பேக் போடவும். பின்னர் ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி முகத்தில் ஒற்றியெடுக்க, பரு, கரும்புள்ளிகள் நீங்கும்.
அதேபோல் கடலை மாவு அரை கப், வெட்டிவேர் – 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு தேக்கரண்டி, தர்பூசணி சாறு கால் கப் எடுத்துக் கலந்து தடவினால், சூட்டினால் நம் உடலில் கட்டிகள் வருவதை தவிர்க்கலாம்.

கால் கப் நுங்குச் சாறு, கால் கப் தர்பூசணிச் சாறு, கால் கப் பார்லி பொடி எடுத்து கலந்து உடல் முழுவதும் மசாஜ் செய்து பின் குளிக்கவும்.இவ்வாறு செய்வதன் மூலம் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்!
Previous Post Next Post