-->

உடல் சூட்டை தனித்து உடலை பாதுகாக்கும் ஓர் அற்புத அகத்தி கீரை

அகத்தி கீரை

அகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது.அகத்திக் கீரை இந்தியாவில் எங்கும் ஏராளமாக வளரக் கூடியது. ஏறக்குறைய இந்தியா முழுவதும் பயிரிடப் படுகிறது. இருப்பினும் இதன் இருப்பிடம் மலேசியா எனக் குறிப்பிடுகிறார்கள். இக் கீரையை அழகுக்காகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் வளர்க்கின்றனர்.

அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்(உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.

அகத்தி கீரையும் அதன் பயன்களும்....

அகத்திக்கீரை பொதுவாக சிறு கசப்பு சுவை உடையது. இக்கசப்பு சுவை குடலில் உண்டாகும் நச்சு நீர்களை முறித்து வெளியேற்றும் குணமுடையது.

குடலில் தேங்கும் மலம் மற்றும் நிணநீர் ஆகிய அசுத்தங்களைச் சுத்தம் செய்யும் ஆற்றல் பெற்றது மலச்சிக்கலை நீக்கி மலத்தை உடைத்து வெளியேற்றும் தன்மை பெற்றது.

இக்கசப்புச் சுவை பித்தச் சூட்டையும் தணிக்க வல்லது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும்.

தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை உண்பதினால் அகலும். இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையைது.

அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்துதலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.

காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆறும்.இலைகளை உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அலவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

உயர்ந்த இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.


தொண்டை வலி மற்றும் குடல் புண் பிரச்சனையை சரி செய்ய அகத்திக் கீரை பயன்படுகிறது. மதிய வேளையில் இதை சாப்பிட்டு வந்தால் அல்சர் மற்றும் உடலில் உள்ள பித்தம் குறையும்.

அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீராடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.


அகத்திக் கீரையை தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பார்வை தெளிவாகும்.

Previous Post Next Post