புரட்டாசி மாதமும் மஹாளய அமாவாசையும்
வருடத்திலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த
அமாவாசையாக வழிபடப்படுவது புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசை
ஆகும்.புரட்டாசி பௌர்ணமியை தொடர்ந்து தேய்பிறையில் வரும் அமாவாசையே மஹாளய
அமாவாசையாக கருதப்படுகிறது.
இந்த தேய்பிறை அமாவாசையின் 15 நாட்களில் சூரியன் கன்னி ராசிக்குள் புகுந்து எமதர்மராஜா நம் முன்னோர்களை பூமிக்கு அவரவர் உறவுகளை தேடி அனுப்புவார் என்று கூறுவார்கள்.
மஹாளய அமாவாசையின் போது நாம் நம்
முன்னோர்களை நினைத்து ஆராதிக்க வேண்டும்.
அவர்கள் நினைவாக தானம் தர்மம் செய்வது சிறந்த பலனைத் தரும்.
மஹாளயபட்சத்து அமாவாசை அன்று பிரபஞ்சத்தின்
அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது. நாம் அளிக்கும் நீரையும்
எள்ளையும் தேடி கோடானகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள்.
அதனால் வாழும்
காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளான இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும்
தர்ப்பணம் செய்ய வேண்டும்.
தர்ப்பணம் முடிந்ததும், முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபடவேண்டும். பிறகு முன்னோர்களின் பிரதிநிதிகளாக சொல்லப்படும் காகத்துக்கு உணவு தரவேண்டும். உயிரினங்களில் கூடி வாழ்ந்து, சேர்ந்து உண்ணும் வழக்கமுள்ள உயர்ந்த குணம்
கொண்டது காக்கை இனம். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுதன் மூலம் பித்ருக்களின் ஆசியைப் பெற முடியும் .
மாஹாளய அமாவாசை நாளில் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, கோ தானம், தானியங்கள், எள், எள் எண்ணெய், வெல்லம், பணம், வஸ்திரம், போர்வை, சால்வை, விளக்கு, கைத்தடி, குடை, விசிறி, செருப்பு ஆகியவற்றில் எது முடியுமோ, அதை தானம் அளிக்கலாம். தானம் பெறுபவர்களுக்கு தாம்பூலமும்
தட்சணையும் கண்டிப்பாக தருதல் வேண்டும். தானம் பெறுபவர்களை மரியாதையாக நடத்துதல்
மிகவும் முக்கியம்.
அதேபோல் கயா, தனுஷ்கோடி போன்ற பிதுர் காரியத்துக்காகவே
ப்ரசித்தி பெற்ற தலங்களில், அல்லது கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்
நிலைகளிலுக்கருகில் உள்ள கரைகளில் திதியும், தானமும் தருவது சிறப்பு வாய்ந்ததாகும்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி
கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது மகாளய அமாவாசை. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று
முன்னோரை நினைத்து வழிபாடு செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை உள்ள காலத்தில்
தர்ப்பணம் செய்ய வேண்டும்.
நமது வாழ்வில் வரும் இன்ப
துன்பங்கள் யாவும் நாம் எமது முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப அமையபெறுகிறது. அதிலே பிதுர் காரியமும் ஒன்றாகும். அதனை
நாம் சிரமமாக பார்க்காமல் சிரத்தையுடன் செய்ய வேண்டும். அது தவறின் பிதுர்களின் கோபத்துக்கு ஆளாக
நேரிடும்.
எனவே இத்தகைய புனிதமான
அமாவசை அன்று நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதையை செய்து அவர்களை மனதார
வழிபாட்டு அவர்களின் ஆசியை பெற வேண்டும்.