கோலம் போடுவது ஏன் ? கோலம் போடுவது எதற்காக?
கோலம் என்பது வெறும் பார்த்து ரசிக்க கூடிய கோடுகள் அல்ல ஒவ்வொரு
கோலத்திற்குள்ளும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் மறைந்து கிடக்கிறது.
கோலம் என்பது கோடுகளால் வரையப்படும் ஒரு கலைதான். அதற்கு எதற்கு புள்ளிகள்,புள்ளிகள்
இல்லாமல் கோலம் போட்டால் கற்பனைக்கு ஏற்றவாறு சுதந்திரமாக கோலம் போடலாமே என்று
நினைக்கலாம்.
ஆனால் கோலத்தில் உள்ள புள்ளிகள் சுகந்திரத்தை தடை செய்யும் முற்று புள்ளிகள்
அல்ல,வாழ்க்கை என்றால் எப்படியும் வாழலாம் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் சந்தோஷம்
மட்டும் தான் முக்கியமென்று வாழ்ந்தால் அது மிருக வாழ்க்கையாகும்.வாழ்க்கைக்கு ஒரு
நெறிமுறை ஒழுக்கம் என்பது வேண்டும் அப்போதுதான் அது முறையான வாழ்க்கையாக இருக்கும்.
ஒழுக்கம் என்பது எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை அழகாக மாற்றுகிறதோ அதே
போலத்தான் கோலங்களுக்கான புள்ளிகளும் கோலத்தை
அர்த்தமுடையதாக்கிறது,அழகாக்குகிறது.முறைப்படி கணக்கு போட்டு வைக்கின்ற புள்ளிகள்
கோலத்தின் கோடுகளை தாறுமாறாக வளரவிடாது,நெறிப்படுத்தி வகைபடுத்தி ஒரு முழுமையான
வடிவமாக்கி விடும் புள்ளிகளை மீறிய கோடுகள் அலங்கோலமாகத்தான் இருக்கும்.அது
போலத்தான் நம் வாழ்க்கையும்.
கோலம் என்பது
வீட்டின் அழகிற்காக மட்டும் போடப்படுவது அல்ல.கோலம் போடுவதற்கும் நம்
வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கோலம் போடுவது பூமிக்கு செய்யும்
மரியாதையாகும்.
தினமும் அதிகாலையில்
சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலம் போடுவதால்
சாணத்தில் உள்ள கிருமி நாசினி கிருமிகளை வீட்டிற்க்குள் நுழையவிடாது.
அதிலும் மார்கழி
மாதத்தில் கோலம் போடுவதில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மார்கழி மாத பனியில் மருத்துவ
குணங்கள் நிறைந்து இருப்பதால் அதிகாலையில் கோலம் போடும் பெண்களுக்கு புத்துணர்ச்சி
கிடைக்கிறது. கோலத்தை வைத்தே ஒரு வீட்டின்
சூழ்நிலையை, அன்று எத்தகைய
நாள் என்பதை முன்னோர்கள் கணித்து கூறி விடுவார்கள்.
கோலம் போடுவது
வீட்டிற்கும் நமக்கும் நன்மை அளிப்பதோடு நமக்கு புண்ணியத்தையும் சேர்த்து
தருகிறது.அதற்கு காரணம் நாம் போடும் அரிசி மாவு கோலம் தான்.
நம் முன்னோர்கள்
அன்றைய காலத்தில் அரிசி மாவினால் தான் கோலம் போட்டனர்.அப்படி அரிசி மாவினால் கோலம்
போடுவதால் கடவுளால் படைக்கப்பட்ட வாயில்லா ஜீவராசிகள் பசியாறும்.அது மிகபெரிய
புண்ணியமாகும்.
கோலத்தின்
அமைப்பானது வீட்டிற்கு லஷ்மி கடாஷத்தை அளித்து துர்தேவதைகளை துரத்தி செல்வ நிலையை
உயர்த்தும்.அரிசி மாவினால் கோலமிடுவதால் சிறு பூச்சிகளான எரும்புகளுக்கு அது
உனவாகவும் பயன்படுகிறது.
வெள்ளை கல்லின்
மாவானது கோலம் போடுவதற்கு எளிதாக இருப்பதாலும் நல்ல நிறத்தை அளிப்பதாலும் தற்போது
வெள்ளை கல்லின் மாவினை கோலம் போட பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இன்றைய
காலத்தில் அறிவியல் வளர்ச்சியால் நம் வாழ்க்கை சூழல் மாறி இன்று கோலம் போடும்
கலாச்சாரமே குறைந்துவிட்டது. அப்படியே போட்டாலும் வீட்டில் வேலை செய்பவர்களே போடுகிறார்கள்.அப்படி
செய்வதால் அந்த புண்ணியம் உங்களையோ உங்கள் வீட்டையோ சேராது.அவ்வாறு செய்யவும்
கூடாது.
வாசலில் எப்படி கோலம் போடவேண்டும்? கோலம் போடுவதால் உண்டாகும் செல்வ வளங்கள்
- சூரிய உதயத்திற்கு முன் எழுந்து சாணம் தெளித்து கோலம் போட வேண்டும்.
- நம் வீட்டு வாசலில் லட்சுமி வாசம் செய்வதால் புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.
- கோலம் போட்டு முடித்ததும் காவியை இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும்.சாணத்தின் பச்சை நிறம் விஷ்ணுவையும், அரிசி மாவின் மாவின் வெண்மை பிரம்மாவையும் காவியின் செம்மை சிவனையும் குறிக்கிறது.
- கோலத்தின் நடுவில் பூசணி பூ வைப்பதால் செல்வம் சேரும்.
- வியாழக்கிழமை துளசி மாடத்தில் கோலம் போடுவது நல்லது.
- வெள்ளிக்கிழமை தாமரை பூ கோலம் போடுவது நல்லது.
- சனிக்கிழமை பவளமல்லி கோலம் போட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- பவுர்ணமி நாளன்று தாமரைப்பூ கோலம் போடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.
- ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை கோலமும், திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலமும் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
- செவ்வாய்க்கிழமை வில்வ இலை போல கோலமும், புதன் கிழமை மாவிலைக்கோலம் போடுவது சிறப்பாகும்.
- கோலத்தின் அனைத்து பக்கத்திலும் பூக்கள் வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
- இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் நாட்களிலோ,அமாவசை நாட்களிலோ கோலம் போடக் கூடாது.
- இடது கையினால் கோலம் போடுவது தவறாகும்.
- பெண்கள் உட்கார்ந்து கொண்டு கோலம் போடக் கூடாது. குனிந்து தான் போட வேண்டும்.
- வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும்.
- கோலம் போட்டு முடித்த பிறகே அடுப்பு பற்றவைக்க வேண்டும்.
- ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய கோலம் போடுவது நல்லது.
- ஆள்காட்டி விரலை நீக்கியபடி கோலம் போட வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு கிழமைக்கும்
ஏற்றவாறு கோலமிட்டால் தீய சக்திகள் நம் வீட்டை நெருங்காது.
கோலம் போடும் பழக்கம் எவ்வாறு வந்தது?
ஆதி காலத்தில்
மனிதன் மரங்களிலும், குகைகளிலும்
வாழ்ந்து வந்தான். பின்னர் காலம் செல்லச் செல்ல சிறு சிறு வீடுகளை கட்ட
ஆரம்பித்தான். அவ்வாறு வீடு கட்டும் போது, கண்ணுக்கு தெரியாத பல நுண்ணுயிர்கள் மடிந்தன. உயிர்களை கொல்வது பாவச்
செயலாகும்.
இது மனிதனை மிகவும் வதைத்தது. ஏதேனும் செய்ய வேண்டும் என்று
நினைத்தான். வீடு கட்டி
முடித்த பின்னர், அரிசி மாவை மணல்
போல திரித்து அதில் வீட்டின் முன் கோலம் போட ஆரம்பித்தான்.
கோலத்தில் இருக்கும்
அரிசியை சாப்பிட எறும்பு மற்றும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் வந்தன. இதனால்
உயிர்களை கொன்ற பாவங்கள் தீர்ந்து விட்டது என்று நிம்மதியாக இருந்தான். கோலமும்
வீட்டின் முன் மிகவும் அழகாக இருந்தது.
ஆனால் இன்று
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, அரிசி கோலம், ரசாயன கோலமானது
பின்னர் காகிதத்தில் கோலம் அச்சு அடிக்கப்பட்டு வீட்டின் முன் ஒட்டப்படுகிறது.