-->

சகல ஐஸ்வர்யங்களையும் தரும் ஹனுமன் ஜெயந்தி

ஹனுமன் ஜெயந்தி விரதத்தின் மகிமைகள்

மார்கழி மாத (05.01.2019 )அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் வாயு தேவனுக்கும் அஞ்சனா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் ஸ்ரீ ஆஞ்சநேயர். ஸ்ரீராம பெருமானின் புகழ் பாடுவதையே தனது மூச்சாக கொண்டவர் ஆஞ்சநேயர்.

ஹனுமன் ஜெயந்தி வழிபாடு

அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். 

இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹனுமனை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள் 


ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் நமக்கு கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும்.


நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்குடும்பத்தில் இன்பம் பெருகும்.ஹனுமான் ஜெயந்தி நாளில் வீர ஆஞ்சநேயரைப் பணிந்து. அவரது ஹனுமான் சாலீஸாவைப் பக்தியோடு பாராயணம் செய்தால் அனைத்துச் சங்கடங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. 

மேலும் ஹனுமான் மற்றும் பைரவரை வழிபடும் பக்தர்களை சனிபகவான் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.
முதல் யுகத்தில் அதாவது த்ரேத யுகத்தில் ஒரு நாள் வாயு புத்திரனின் மைந்தனாகிய ஹனுமனை சனி பகவான் பிடிக்கச் சென்றுள்ளாராம். உடனே சனி பகவான் ஹனுமனது தலையில் அமர்ந்து கொண்டு உன்னை பிடிக்கப் போகிறேன் என்று கூறினாராம். அப்போது ஹனுமான் மிகப்பெரிய பாறைகளை தனது தலையில் ஒன்றன் மீது ஒன்றாக தூக்கி வைத்தாரம், பாரம் தாங்காத சனிபகவான் தன்னை விட்டு விடும் படி கேட்டுக் கொண்டாராம். ஹனுமனும் விட்டு விட்டார்.

ஆனாலும் சனிபகவான் கடமை தவறாதவர் அல்லவா! மற்றொரு முறை மீண்டும் ஹனுமனை பிடிக்க வந்து ஹனுமனிடம் கேட்டார் , உன்னை எங்கிருந்து பிடிக்க வேண்டும் என்று ? அதற்கு ஹனுமான் முதலில் காலில் இருந்து பிடித்துக் கொள் என்றாராம்.
சனிபகவானும் அவரது காலைப் பிடிக்க செல்லும் பொது ஹனுமான் அவரை காலுக்கு கீழே வைத்து அழுத்த தொடங்கினாராம். மீண்டும் சனிபகவான் தன்னை விட்டு விடும் படி கேட்டுக் கொண்டாராம். அதற்கு ஹனுமான் என் பக்தர்களையும், ராம பக்தர்களையும் ஒன்றும் செய்யக் கூடாது என்று சத்தியம் செய் என்றாராம். சத்தியம் வாங்கிக் கொண்டு சனிபகவானை விட்டாராம்.

எனவே ஆஞ்சநேயரையும் ராமரையும் ஹனுமான் ஜெயந்தி அன்று வழிபாடு செய்தால் மங்களம் உண்டாகும். மேலும் ஆஞ்சநேயருக்கு செவ்வாய் கிழமை தோறும் குங்குமம் அபிசேகம் மற்றும் வெண்ணை சாற்றுதல் மிகச் சிறப்பு. ஆஞ்சநேயரை வணங்கும் பொழுது முதலில் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லி விட்டு பின்பு தான் அனுமன் பற்றி பாடல்கள், துதிகள் சொல்ல வேண்டும். ஏன் எனில் அந்த அளவுக்கு ராமர் மீது அவர் பற்று வைத்து உள்ளார். 

அனுமன் ஜயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வணங்கலாம். 

அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும். பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும். மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம்.  சனிபகவானை வெற்றிகொண்ட வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜயந்தி நாளில் வணங்கினால் சனிதோஷங்களிலிருந்து தப்பிக்கலாம். சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர். சிவனையும் திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர், எனவே இவரை வணங்கி அளவில்லாத ஆனந்தத்தை அடைவோம்.
Previous Post Next Post