-->

தீர்க்க சுமங்கலியாக இருக்க வரம் கொடுக்கும் காரடையான் நோன்பு


காரடையான் நோன்பு என்றால் என்ன ?

பங்குனியும்,மாசியும் இணையும் நாளன்று பெண்கள் கடைபிடிக்கும் நோன்பு காரடையான் நோன்பு. கணவரை என்றும் பிரியாமல் இருக்கவும்,கணவரின் ஆரோக்கியம் மேம்படவும், கணவர் நீண்ட ஆயுளோடு இருக்கவும், பெண்களால் கடைபிடிக்கப்படும் நோன்பு காரடையான் நோன்பாகும். இந்நோன்பு வரும் 15.03.2019 வெள்ளிக்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது.


கணவன் மீது மிகுந்த அன்பு கொண்ட சாவித்ரி தன் கணவனின் ஆயுட்காலம் முடிந்தாலும் கூட அவரை விட்டு பிரியக் கூடாது என்று அந்த எமதர்மனிடமே போராடி தன் கணவனாகிய சத்தியவானை மீட்டெடுத்த நாளை தான் நாம் காரடையான் நோன்பு நாளாக கொண்டாடுகிறோம்.

அவ்வாறு தன் கணவனை எமனிடம் இருந்த மீட்க அம்மனை வணங்கி  கணவனை மீட்டுத் தருமாறு வேண்டி நோன்பு நோற்றாள் சாவித்ரி. அம்மனின் பரிபூரண அருளை பெற்று எமனிடமிருந்து கணவனை மீட்டு வந்தாள் சாவித்ரி.

இந்த நோன்பின் மகத்துவம் என்னவென்றால் இமைப்பொழுதும் தன் கணவனை பிரியாமல், இறுதிவரை தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். கணவன் நீண்ட ஆயுளோடு இருக்கவும், ஆரோக்கியத்தோடு இருக்கவும், மனைவி தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் கடைபிடிக்கப்படுவதே இந்த காரடையான் நோன்பாகும்.

காரடையான் நோன்பு எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்?


நோன்பு கடைபிடிக்கப்படும் நாளில் வீட்டினை குறிப்பாக பூஜை அறையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வ படங்களுக்கும் மஞ்சள்,குங்குமம்,பூ வைக்க வேண்டும்.

பூஜை செய்ய வேண்டிய இடத்தில் கோலமிட வேண்டும்.
முழுமுதற் கடவுளான விநாயகருக்கு மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க வேண்டும்.

ஒரு கலசத்தின் மேல் தேங்காய் மாவிலை வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி, அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும்.

காமாட்சி விளக்கை ஏற்றி வைத்து சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும்.
அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து அதனை சாவித்திரியாக கருதி வழிபட்டு பூஜை செய்ய வேண்டும்.

சாவித்திரி, காட்டில் தன் கணவர் சத்தியவானுடன் வாழ்ந்த போது அங்கு கிடைத்த கார் அரிசியையும், காராமணியையும் கொண்டு அடை  செய்து அத்துடன் வெண்ணெய்யும் சேர்த்து அம்மனுக்கு சமர்ப்பித்து வழிபட்டாள்.

அதனால் ஒரு வாழை இலையில் நெய்வேத்தியமாக வெண்ணெய், காராமணியும், காரரிசியும் சேர்த்து செய்த அடை, பூ, வெற்றிலை, பாக்கு, மஞ்சள்,குங்குமம், பழங்கள், தேங்காய், மஞ்சள் சரடும் வைத்து வழிபட வேண்டும்.

உருகாத வெண்ணெய்யும், ஓரடையும்
வைத்து நோன்பு நோற்றேன்
ஒரு நாளும் என் கணவன் என்னைப்
பிரியாமல் இருக்க வேண்டும்

என்று மனதில் நினைத்துக் கொண்டு அம்பாளை வழிபட வேண்டும். நோன்பு இருக்கும் போது முழு மனதோடு கடவுளை நினைத்து விரதம் இருந்து நோன்பு முடிந்த பின்னரே உணவு உண்ண வேண்டும்.
இவ்வாறு நோன்பிருந்து வழிபட்டால் தீர்க்க சுமங்கலியாக இருக்கும் வரத்தை பெறலாம்.
Previous Post Next Post