அட்சய திருதியை என்றால் என்ன?
அட்சய திருதியை
என்பது சித்திரை மாதத்தில் வரும் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் அட்சய திருதியை நாளாக
கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 07.05.2019 அன்று அட்சய திருதியை நாளாகும். அட்சயம் என்ற சொல்லுக்கு என்றும் குறையாமல்
வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொருள்.
அட்சய திருதியை
அன்று ஆரம்பிக்கும் எல்லா செயல்களும் குறையாத செல்வத்தையும், நன்மைகளையும் அள்ளித் தரும் என்பது நம்பிக்கை.
இந்நாளில் புதிய நல்ல செயல்களைத் தொடங்குதல், தான தருமங்கள் செய்தல், விலையுயர்ந்த பொருட்களை வாங்குதல்
போன்றவற்றிற்கு சிறந்த நாளாகும்.
இந்நாளில் நாம்
செய்யும் நற்செயல்களால் வாழ்வில் உள்ள வறுமை, துன்பம், அனைத்தும் நீங்கி வளமான வாழ்வு அமைய
வழிவகுக்கும்.
மகிழ்ச்சி,
நோயற்ற வாழ்வு, செல்வச் செழிப்பு ஆகியவற்றைப் பெற அட்சய
திருதியை நாளில் தான தருமங்கள் செய்வது சிறந்த செயலாகும்.
அட்சய திருதியையின் சிறப்புக்கள்
- அட்சய திருதியை அன்றுதான் பகீரதனின் தவத்தின் காரணமாக கங்கை பூமியைத் தொட்டது.
- அன்றுதான் பாண்டவர்கள் சூரியனிடமிருந்து வற்றாத உணவைத் தரும் அட்சய பாத்திரத்தையும், மணிமேகலை அட்சயப் பாத்திரத்தையும் பெற்றனர்.
- பிரம்மஹத்தி தோசம் காரணமாக சிவபெருமானின் கையில் ஒட்டியிருந்த பிரம்ம கபாலத்தில் அன்னபூரணி உணவினை நிரப்பி பிரம்ம கபாலத்தை விழச் செய்து சிவனின் தோசம் நீக்கியதும் அன்றைய நாளில்தான்.
- கவுரவர் சபையில் பாஞ்சாலியின் மானத்தைக் காக்க கிருஷ்ண பரமாத்மா அட்சய என்று கூறி ஆடை கொடுத்ததும் அட்சய திருதியை அன்று தான்.
- வியாசர் மகாபாரதத்தை விநாயகரிடம் எழுதுமாறு வேண்டியதும் அட்சய திருதியை தினத்தில்தான்.
- திருமாலின் தசாவதாரங்களில் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதாரமும், எட்டாவது அவதாரமுமான பலராமர் அவதாரமும் நிகழ்ந்தது இத்தினத்தில்தான்.
- அன்பினால் ஒரு பிடி அவலை கிருஷ்ணனுக்கு தானமாகக் கொடுத்து குசேலர் எல்லாச் செல்வங்களைப் பெற்றதும் இத்தினத்தில்தான்.
- சாபத்தினால் தேய்ந்து கொண்டிருந்த சந்திரன் மீண்டும் வளரத் துவங்கியதும் இத்தினத்தில்தான்.
- திருமாலின் மார்பில் திருமகள் நீங்கா இடம் பெற்றதும் அட்சய திருதியை தினத்தில்தான்.
- அஷ்டலட்சுமிகளில் இருலட்சுமிகளான தானிய லட்சுமியும், ஐஸ்வரிய லட்சுமியும் இத்தினத்தில்தான் தோன்றினர்.
- செல்வத்துக்கு அதிபதியான குபேரன் மகாலட்சுமியிடம் இருந்து அஷ்ட ஐஸ்வரியங்களைப் பெற்றதும் இத்தினத்தில்தான்.
அட்சய திருதியையில் வழிபாடு செய்யும் முறை
அட்சய திருதியை அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் நீரினால் அல்லது தானியத்தால் நிரப்பட்ட கலசம் வைத்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.தங்களுக்கு பிடித்த இஷ்டதெய்வங்கள், குலதெய்வங்கள் ஆகியவற்றின் உருவப்படங்கள் வைத்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.
வழிபாட்டின்போது அருகம்புல், மரிக்கொழுந்து, வில்வம், துளசி, மல்லிகை, செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.
அட்சய திருதியை அன்று ஏன் தங்கம் வாங்க வேண்டும்...?
அட்சயதிரிதியை
அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும்
என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர்.
ஆனால் இவ்வளவு
விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு
மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம். அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம்.
பொதுவாக
தானியங்களில் தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள். அதனால் தான் திருமணம் முடிந்த
நங்கைகள், முதன் முதலாக
மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும் போது, மரக்காவில் பொன்னி அரிசி போட்டு அதன் மீது காமாட்சி விளக்கேற்றி, அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வரச்
சொல்வர்.
அட்சய திருதியை
அன்றைக்கு, முனை முறியாத
பச்சரிசி வாங்குவது நல்லது. கைக்குத்தல் அரிசிதான் முனை முறியாத அரிசி. அந்த முனை
முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில்,
பீரோவில் கொஞ்சம் வைப்பது
நல்லது.