-->

உங்கள் துணையிடம் எந்த காரணத்தை கொண்டும் இந்த 5 வார்த்தைகளை மட்டும் பயன்படுத்திவிடாதீர்கள்



கணவன்,மனைவி இருவரும் பயன்படுத்தகூடாத 5 வார்த்தைகள் 


உறவுமுறையில் விரிசல் ஏற்படுவதற்கு சண்டையின் போது தம்பதியினர் பயன்படுத்தும் ஒரு சில மோசமான வார்த்தைகளே காரணம் ஆகும்.

‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு’


வள்ளுவரின் வாக்கிற்கேற்ப தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்,  ஆனால் நாவினால் கூறிய தீய சொல்லின் வடு என்றும் ஆறாது. நாவினால் சுட்ட சொல்லுக்கு, நீங்கள் எந்த வகையில் மன்னிப்பு கேட்டாலும் அது பாதிக்கப்பட்டவர்களின் மனதில் இருந்து ஆறவே ஆறாது.

இந்த உலகில் மன்னிக்க முடியாதது என்ற ஒரு குற்றம் கிடையாது. ஆனால் அதனை மன்னிப்பதற்கு நம் மனது பக்குவப்படவேண்டும். அப்படி நம் மனது பக்குவபடவில்லையென்றால் நமது உறவு முறைகளில் விரிசல் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது ஆகிவிடும்.

குடும்பத்தில் எவ்வளவுதான் பிரச்சனை வந்தாலும் உங்கள் துணையின் மனதை காயப்படுத்தும் வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த கூடாது. கோபத்தில் பேசிவிட்டேன் என்று கூறினாலும் அந்த வார்த்தை என்றென்றைக்கும் அவர் நினைவில் இருந்து கொண்டே இருக்கும். அவை என்னென்ன என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

உன்னை விட நான் திறமையானவன்

உங்களிடம் ஒரு திறமை இருந்தால் உங்கள் துணையிடம் மற்றொரு திறமை இருக்கும். நீங்கள் செய்யும் வேலைகளை அவரால் செய்ய முடியாது அதே போல அவர் செய்யும் வேலைகளை உங்களால் செய்ய முடியாது. எனவே உன்னை விட என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். அது தம்பதியினர் உறவில் இடையே ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும்.

பக்கத்து வீட்டில் இருப்பவரை பார்

சம்பாத்தியம் மற்றும் குணநலன்கள் சார்ந்த விஷயத்தில், பக்கத்து வீட்டில் இருப்பவரை ஒருபோதும் ஒப்பிட்டு பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் வாழும் வாழ்கை முறை வேறு, அவர்கள் வாழும் வாழ்க்கை முறை வேறு.

போலியானவன்

எதிர்பாராமல் ஏற்படும் சண்டையின் போது என்னிடம் நீ நடிக்கிறாயா? என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், மனதுக்குள் நம்மை போலியானவன் என்று நினைத்துக்கொண்டுதான் இவ்வளவு நான் நம்முடன் வாழ்ந்துள்ளார் என்று துணைக்கு நினைக்கத் தோன்றும்.

நீ ஒரு தண்டம், எதற்குமே லாயக்கில்லை

சண்டைபோட்டுக்கொண்டிருக்கும்போது கோபத்தின் உச்சகட்டத்தில் இருக்கும் போது நீ ஒரு தண்டம், வேஸ்ட் போன்ற வார்த்தைகளை மட்டும் சொல்லிவிட்டால் போதும், அந்த இடமே ஒரு போர்க்களமாக மாறிவிடும். எதற்குமே லாயக்கில்லை என்ற வார்த்தை அவர்கள் மனதில் பசுமரத்து ஆணி போன்று பதிந்துவிடும். வாழும் காலம் உள்ளவரை அந்த வார்த்தை மனதில் ஒருவித வலியினை துணைக்கு ஏற்படுத்தி கொண்டுதான் இருக்கும்.

கடந்த காலத்தை பற்றி பேசுவது

திருமணம் ஆன புதிதில் தம்பதியினர் தங்களுடைய கடந்த காலம், திருமணதிற்கு முந்தைய காதல் பற்றி பேசி சந்தோஷமாக சிரித்து கொள்வார்கள். ஆரம்பத்தில் இதுபோன்ற விஷயம் தம்பதியினர்களுக்கு பெரிய விஷயமாக தெரியாது. ஆனால், காலப்போக்கில் சண்டை ஏற்படும்போது கடந்த காலத்தை பற்றியோ, திருமணதிற்கு முந்தைய உறவினை சொல்லிக்காட்டும்போது, இவ்வளவு நாள் சந்தேகத்துடன் தான் என்னுடன் குடும்பம் நடத்தி கொண்டிருக்கிறாயா என்ற கேள்வி அங்கு எழுந்து உறவில் மிக பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும்.


இவற்றை கடந்து சென்றாலே இல்லறமானது நிச்சயம் இனிமையானதாக இருக்கும்.

Previous Post Next Post