-->

சிவன் சொத்து குலநாசம் என்று சொல்கிறார்களே அது ஏன் என்று தெரியுமா?


சிவன் சொத்து குல நாசம் என்பதன் விளக்கம்


பெரியோர்கள் சிவன் சொத்து குலநாசம் என்று கூறுவார்கள். ஆனால் அதற்கான சரியான விளக்கம் நம்மில் பலக்கு தெரிவதில்லை. எதனால் இதை கூறினார்கள் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சிவன் சொத்து வம்ச நாசம்

ஒருமுறை எமலோகத்தில் தனது சிம்மாசனத்தில் கம்பீரமாக உட்கார்ந்திருந்த எமதர்மன், தனது தூதர்களை அழைத்தார். இந்த ஊரில் இந்த இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட மனிதனின் இறுதிகணம் இன்னும் இரண்டு நாட்களில் முடியப் போகிறது. நீங்கள் சென்று அவனை அழைத்து வாருங்கள். ஆனால் இம்முறை உங்களை நான் சோதிக்க போகிறேன். நீங்கள் செல்லும் இடத்தில் ஒரே மாதிரியாக இரண்டு பேர் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அதில் ஒருவன் கலியுகம் போற்றும் படியும், இன்னொருவன் கலியுகம் தூற்றும்படியும் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள். அதில்எனக்கு கெடுதல் புரிபவனின் உயிர் மட்டும் தான் வேண்டும், அதை நீங்கள் சரியாக செய்ய வேண்டும் என்றார். எமதர்ம ராஜாவின் கட்டளைப்படி எமதூதர்களும் பூலோகம் வந்தனர்.

எமதர்மர் குறிப்பிட்டு சொன்ன அந்த இருவரையும் அந்த எமதூதர்கள் கண்காணித்தார்கள். அந்த இருவரில் ஒருவன் தினமும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டு ஆலய பணிகளில் ஈடுபட்டு பக்தியுடன் இருந்தான். ஆனால் மற்றொருவனோ கள்ளம், கபடு, திருடு, பொய் பித்தலாட்டம் என்று உலகில் இருக்கும் அத்தனை கெட்ட வழிகளையும் பின்பற்றி வாழ்ந்து வந்தான். எமதூதர்கள் இருவரது நடவடிக்கைகளையும் கண்காணித்து குறிப்பிட்ட நேரம் வந்ததும் சிவாலயத்துக்குள் பணியில் இருந்தவனை மட்டும் பாசக்கயிறு போட்டு இழுத்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக செல்லாமல் நரகத்துக்குள் இழுத்துச் சென்றனர்.

இதை கவனித்துக்கொண்டிருந்த எமதர்ம ராஜா எமதூதர்களை பார்த்து, என்ன செய்கிறீர்கள் தூதர்களே நீங்கள்நல்லவனை மாற்றி அழைத்து வந்ததோடு மட்டுமல்லாமல், அவனை நரகத்துக்குள் கொண்டு சென்று விட்டீர்களே?' என்று கோபம் கொப்பளிக்க கேட்டார்.

அதற்க்கு எமதூதர்கள், எமதர்ம ராஜாவே, இவன் சிவாலயங்களில் சேவை செய்வதாக சொல்லி அங்கிருக்கும் பொருள்களை யாரும் அறியாவண்ணம் திருடி அதை கொண்டு தனக்கும், தனது குடும்பத்திற்கும் செலவு செய்து கொண்டு, அதே சமயம் சமூகத்திற்கும் செலவு செய்து நல்ல முறையில் நல்ல பெயர் பெற்று வாழ்ந்துக் கொண்டிருந்தான். இவன் கேட்பவர்களுக்கு உதவிகள் செய்தாலும் இறைவனுக்குரியதை எடுத்து அனுபவித்து அதையே உதவி என்று சொல்லி நல்லவன் போன்று தன்னை காட்டிகொண்டு மக்களை ஏமாற்றியதோடு நில்லாமல், பரம்பொருளான சிவபெருமானையும் ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஆனால் இன்னொருவனோ மக்களிடம் கொள்ளையடிக்கிறான். அவன் படிப்பறிவில்லாதவான் ஆதலால் அவன் வயிற்று பிழைப்புக்காக கொள்ளையடிக்கிறான்,அவனுக்கு தான் செய்வது தவறு என்று தெரியவில்லை. ஆனால் இவனுக்கோ நன்மை எது, தீமை எது என அனைத்தும் தெரிந்திருக்கிறது. அனாலும் இவன் தன்னை படைத்த இறைவனிடமே பசுத் தோல் போர்த்திய புலி போல நல்லவன் போல நடித்து நாடகமாடிக் கொண்டிருக்கிறான். அதனால் தான் இவனை அழைத்து வந்தோம்.


சிவன் சொத்தை இவன் களவாடியதால் இவனும், இவன் குடும்பத்தினரும், வாழ வேண்டிய இவனது வம்சமும் இனி நல்லதை நினைத்து கூட பார்க்க முடியாது. வாழ்க்கையில் கவலையும், அச்சமும், தரித்தரமும் சூழவே அவர்கள் இறுதிக் காலம் வரை வாழ வேண்டும். அவர்களின் மரணமும் அகால மரணமாக தான் இருக்கும் என்றனர்.

இதை கேட்டு புன்னகைத்த எமதர்மர், என்னுடைய தூதர்கள் எப்போதும் அற வழியிலேயே செல்வார்கள் என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் என்று அவர்களை மெச்சினார். இதனால் தான் சிவன் சொத்து குலநாசம் என்று கூறுகிறார்கள் பெரியோர்கள்.

Previous Post Next Post