ஆடிப்பூர விரதத்தின் மகிமைகள்
ஆடி மாதத்தில் பூரம்
நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுவதே “ஆடிப்பூரமாகும்”. இன்று 3.௦8.2019 ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம்
நாளாகும். இந்நாளையே ஆடிப்பூரமாக கொண்டாடுகிறோம். அம்மனுக்கு விசேஷ நாட்கள் பல
உள்ளன, அதில் மிக முக்கியமானது ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் வரும்
ஆடிப்பூரமாகும். இந்த நாள் அம்மனுக்கு மிகவும் சிறந்த நாளாகும்.
ஆடிப்பூர நன்னாளில்தான்
அன்னை பூமாதேவியே ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார். எனவே
இன்றைய தினம் அனைத்து வைணவ கோவில்களும் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆடிப்பூரம்
விரதம் இருந்து அம்மனை தரிசித்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்,
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில்
உள்ள பிரச்சனைகள் தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும்.
ஆடிப்பூரம் அன்று
அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்து அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும். நாம்
இந்நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கி தருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
அம்மனுக்கு
வளைகாப்பு நடந்து முடிந்த பின் அந்த வளையல்கள் பிரசதாமாக வழங்கப்படும். குழந்தை
பாக்கியம் இல்லாத பெண்கள் இவ்வாறு பிரசாதமாக வழங்கப்படும் வளையல்களை அம்மனை வேண்டி
வணங்கி அணிந்து கொண்டால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
இந்த புண்ணிய
தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்று வழிபடுவதன் மூலம் திருமணமாகத பெண்களுக்கு திருமண
வரம் கிடைக்கும். எம் பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற
ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக
அவதரித்தாள்.
ஆடிப்பூரத்தில்
அவதரித்த அம்மன் உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று
கூறப்படுகிறது. ஆடிப்பூரம் நாளில் சிவ ஆலயங்களில் அன்னைக்கு வளைகாப்பு
நடத்துவார்கள். தாய்மை பேறுக்காக தவமிருக்கும் பெண்கள் அன்னைக்கு வளைகாப்பு
நடத்துவதற்காக வளையல்களை வாங்கிக் கொடுத்து தங்களுக்கும் விரைவில் வளைகாப்பு
நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.
அம்மனுக்கு
வளைகாப்பு உலகத்தை படைத்து, காத்து, ரட்சித்து அருளும் அன்னைக்கு மஞ்சள் காப்பு,
சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு நடத்துவார்கள். ஆனால்
அன்னைக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம்.
வளையல் பிரசாதம்
மயிலாப்பூர் கற்பகவல்லி அம்மன், திருவாரூர்
கமலாம்பாள், நாகப்பட்டினத்தில்
நீலாயதாட்சி அம்மன், திருக்கருகாவூர்
கர்ப்பரட்சாம்பிகை, ஆகிய தலங்களில்
உள்ள அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும்.
இரவில் பல்லாயிரக்கணக்கான வளையல்களை கோர்த்து வளைகாப்பு நடத்துகின்றனர். வளைகாப்பு
முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக
வழங்கப்படும்.
பெருமாளே தன்
கணவனாக கிடைக்க வேண்டும் என்று நினைத்து அவர் அணியும் மாலையை சூடிகொடுத்த
சுடர்கொடியான ஆண்டாள் அவதரித்ததும் இந்த ஆடிப்பூர நன்னாளில் தான். இவ்விழாவை ஸ்ரீவில்லிபுத்தூரில்
பத்து நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
நாமும் இந்நாளில்
ஆண்டாளையும், அகில உலகத்தையும் ஆளும் அம்மனையும் வழிபட்டால் வாழ்வில் அனைத்து
செல்வங்களும் கிடைக்கப் பெரும். வாழ்வும் ஆனந்தமயமாக அமையும்.