-->

அசைவ உணவை சாப்பிட்ட பிறகு ஏன் கோயிலுக்குச் செல்லக் கூடாது என்கிறார்கள் தெரியுமா?


அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லலாமா?



மசூதிக்கு செல்லும் போதோ, சர்ச்சுக்கு செல்லும் போதோ அசைவ உணவுகளை சாப்பிட்டுவிட்டு செல்லக்கூடாது என்று வரைமுறை படுத்தப்படுவதில்லை. ஆனால், இந்து மதத்தில் மட்டும் கோவிலுக்கு செல்லும்போது அசைவம் சாப்பிட்டுவிட்டு செல்ல கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? ஆலயங்களுக்குச் செல்லும் போது அசைவ உணவுகளைத் தவிர்க்க சொல்வதன் காரணம் என்ன?


நாம் கோவிலுக்குச் செல்வது கடவுளை வணங்க தானே, அதற்கு நம்முடைய மனது தூய்மையாக இருந்தால் போதாதா? பிறகு ஏன் அசைவ உணவை சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லக் கூடாது என்று சிறு வயதிலேயே நமது பெற்றோர்கள் நமக்கு சில வரைமுறைகளைக் கற்று தருகிறார்கள் என்கிற கேள்விகள் பலரின் மனதில் எழுவதுண்டு. 

மேற்கத்திய நாகரிகங்களில் எல்லாம் உணவு என்பது உடலை வலுப்படுதவும், வளப்படுதவும், உடல் பலத்தை அதிகரிக்கவும் தான். ஆனால் இந்திய கலாச்சாரத்தில் மட்டும் தான் உண்ணும் உணவை இறைவனின் பிரசாதமாக கருதும் தன்மை காணப்படுகிறது. 


நாம் உண்ணும் உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம். பொதுவாக அசைவ உணவுகளை உண்டால் அதை ஜீரணிக்க நம் உடல் உறுப்புகள் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால், மனதளவிலும் அசைவ உணவுகள் மந்தமான நிலையை ஏற்படுத்தும். கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை, மனதையும் சேர்த்து தான் குறிக்கிறது. மனதளவில் மந்த நிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை கிரகிக்க கூடிய ஆற்றலை முற்றிலும் இழந்து விடுகிறார்.

முனிவர்களும், சித்தர்களும், ரிஷிகளும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இறையாற்றல் அதிகமாக பெருக்கெடுப்பதற்கு மாமிச உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தெய்வீக நிலையை அடைவதற்கு அசைவ உணவு சாப்பிடுவது பெரும் தடையாக இருப்பதாக ரிஷிகளும், சித்தர்களும் தங்கள் எழுதிய நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அசைவ உணவு சாப்பிடுபவர்களின் உடல் மற்றும் மனம் பஞ்ச பூதங்களிலிருந்து வெளிப்படுகின்ற இறை ஆற்றல் நிறைந்த பிராண சக்தியை கிரகிக்க கூடிய நிலையை இழந்து விடுகிறது என்கிறார்கள். குறிப்பாக கோவில்களில் இந்த தெய்வீகமான பிராண சக்தியானது அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது. அசைவ உணவு சாப்பிடுபவர்களை விட சைவ உணவுகளை சாப்பிட்டு விட்டு கோயில்களுக்கு செல்பவர்களின் உடல் மற்றும் மனம் இந்த சுத்தமான பிராண சக்தியை அதிகம் கிரகித்துக் கொள்ள முடிகிறது என தங்களின் அனுபவத்தின் மூலம் ரிஷிகளும், சித்தர்களும் கண்டறிந்தனர்.

அசைவ உணவானது நன்மை தரும் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும். எனவே தான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான சைவ உணவை உண்டு, மனதில் இறை சிந்தனையுடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் கூறுகிறார்கள்.

நாம் கோவிலுக்கு செல்வதே நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களை போக்கி புண்ணிய பலன்களை பெருக்கி கொள்ளதான். ஆனால் கோவில்களுக்கு செல்லும் போது பிற உயிர்களை கொன்று செய்யப்படும் அசைவ உணவுகளை சாப்பிட்டு விட்டு கோவில்களுக்கு செல்வதால் ஏற்கனவே செய்த பாவங்களோடு இந்த புதிய பாவம் சேரும். மேலும் ஆற்றல் மிக்க தெய்வங்களின் சாபங்களையும் நமக்கு ஏற்படுத்தி விடும். எனவே கோவிலுக்கு செல்லும் போது அசைவ உணவை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.


முனீஸ்வரன், சுடலை மாடன், அம்மன் போன்ற அசைவ உணவு படையல்களை ஏற்கின்ற கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள் இருக்கும் ஆலயங்களிலும் கடவுளுக்குப் படைத்த பின்னரே அசைவ உணவுகளை உட்கொள்கிறோம். தவிர, பெரும்பாலான காவல் தெய்வங்களும், சிறு தெய்வங்களும் திறந்த வெளியிலேயே அமைந்திருக்கின்ற ஆலயங்களில் தான் தரிசிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post