விநாயகருக்கு படைக்கப்படும் கொழுக்கட்டை
முழுமுதற்கடவுளான விநாயகருக்கு படைக்கப்படும் பொருட்களில் முக்கியமானது
கொழுக்கட்டை ஆகும். விநாயகருக்கு கொழுக்கட்டை ஏன் படைக்கப்படுகிறது? அவ்வாறு படைக்கப்படும்
கொழுக்கட்டை யாருடைய பசியைத் தீர்க்கிறது என்பது பற்றிப் பார்ப்போம்.
முன்னொரு காலத்தில் ஞானபாலி என்னும் அரசன் வாழ்ந்து வந்தான். அவன் விநாயகரின்
தீவிர பக்தன். நீதிநெறி தவறாமல் நாட்டை நல்லமுறையில் ஆட்சிசெய்து வந்தான். ஒருமுறை அவன்
நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் கஷ்டப்படக் கூடாது என்று பல
திட்டங்களைத் தீட்டி, அவர்களைக்
காப்பாற்றி வந்தான். எனினும் பஞ்சம் தொடர்ந்து நீடித்ததால், குருவின் ஆலோசனைப்படி ருத்ர யாகம் ஒன்றைச்
செய்யத் தொடங்கினான்.
யாகத்தின் நடந்து கொண்டிருந்த போது அந்த வழியே சென்ற தேவமங்கையான மேனகையின்
அழகில் மயங்கிய ஞானபாலி தன்னிலை மறந்து சிற்றின்ப ஆசையில் யாகத்தை பாதியில்
நிறுத்திவிட்டு எழுந்து மேனகையின் பின்னே சென்றான். ஆனால் மேனகையோ பின் தொடர்ந்து
வந்த அரசனை எச்சரித்துவிட்டு மேனகை மறைந்தாள். இதனால் ஏமாற்றமடைந்த ஞானபாலி
மீண்டும் யாகம் செய்யும் இடத்துக்கு வந்தான். யாகம் பாதியில் நின்றதால் பெரும்
ஆபத்து ஏற்படும் என்று குரு எச்சரித்தார். எனவே, மீண்டும் மற்றொரு நாள் யாகத்தைத் முதலில்
இருந்து தொடங்கலாம் என்றும் அறிவுறுத்தினார். அதைக் கண்டுகொள்ளாத ஞானபாலி யாகத்தை
மீண்டும் தொடர்ந்தான். இதனால் கோபமடைந்த அஷ்ட திக் பாலகர்கள் ஞானபாலி முன் தோன்றி அவனை
ஒற்றைக் கண் பூதமாக மாறுவாய் என்று சபித்தனர். இதனால் பூதமாக அலையத் தொடங்கினான்
ஞானபாலி.
கொடிய அரக்கனாக மாறிய ஞானபாலி கண்ணில் பட்ட மனிதர்களை எல்லாம் சாப்பிட்டான்,
சகல உயிரினங்களையும் வதைத்தான். பெரும்பசியால் எல்லா உயிர்களையும் விழுங்கினான். ஆனாலும்,
விநாயகப் பெருமானின்
வழிபாட்டை மட்டும் தொடர்ந்தான். பூதமான ஞானபாலியை எந்த தேவர்களாலும் அழிக்க
முடியவில்லை. அவனுக்கு விநாயகரின் ஆசி இருந்ததே அவனை அழிக்க முடியாததற்கு காரணம்
என்று பூமாதேவி அறிந்துகொண்டாள். தன் மக்களைக் காக்க விநாயகரை வேண்டினாள். தன்
பக்தனான ஞானபாலிக்கு அருள் புரியவும், உலகை காக்கவும் விநாயகர் திருவுளம்
கொண்டார்.
இதனால் வேடனாக உருமாறிய விநாயகர் ஞானபாலியை
எதிர்க்க வந்தார். எல்லோரையும் அழித்துவிடும் பூத வடிவம் கொண்ட ஞானபாலியால்,
அந்த வேடனை மட்டும்
ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் இருவருக்குள்ளும் பெரும் சண்டை ஏற்பட்டது. தன்னுடன் சண்டையிடுவது வேடன் அல்ல விநாயகர் என்பதை
அறிந்துகொண்டான் ஞானபாலி.
கண்ணீரோடு விநாயகரை வணங்கிய ஞானபாலி,
தனக்கு மன்னித்து மோட்சம்
அளிக்குமாறு வேண்டினான். தனக்கு ஏற்படும் பெரும்பசியை போக்கவும், தன்னையும் பிள்ளையார் தம்மோடு
வைத்துக்கொள்ளுமாறு வேண்டினான். மீண்டும் பிறவா பெருவாழ்வைத் தந்து காக்குமாறு வேண்டினான்.
பரம பக்தனான ஞானபாலியைக் கொல்லவோ, அவனை விட்டுச் செல்லவோ விநாயகருக்கு மனம் வரவில்லை. பூத
வடிவம் கொண்டு கொடுமையான செயல்கள் புரிந்ததால், சொர்க்கமும் ஞானபாலிக்குச் சாத்தியமில்லை என்று
உணர்ந்தார். எனவே, அவன் வேண்டி
கொண்டபடி தன்னுடனேயே அவனை வைத்துக்கொள்ள எண்ணினார். அதே சமயம் அவனது
பெரும்பசிக்கும் வழி செய்ய எண்ணம் கொண்ட விநாயகர், விஸ்வரூப வடிவம் எடுத்து,
ஞானபாலியைத் தன் கையால்
பிடித்து, அவனை கொழுக்கட்டை
வடிவமாக்கி அப்படியே விழுங்கிவிட்டார். இப்படியாக ஞானபாலி, கொழுக்கட்டை வடிவத்தில் விநாயகப் பெருமானின்
வயிற்றில் அமர்ந்துகொண்டான்.
கிடைப்பதர்க்கறிய இந்தப் பேற்றை பெற்ற ஞானபாலி பெரும் ஆனந்தம் கொண்டான்.
தேவர்களும், மக்களும் இந்தச் சம்பவத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். விநாயகரின்
ஆணைப்படி, ஞானபாலிக்கு
ஏற்படும் பசியைப் போக்க, அவருக்குக்
கொழுக்கட்டை படைக்கவும் ஒப்புக்கொண்டார்கள். அன்றிலிருந்து விநாயகருக்கு படைக்கப்படும்
கொழுக்கட்டை யாவும் ஞானபாலிக்கே போய் சேர்ந்தன. நாமும் இன்று வரை ஞானபாலியின்
நினைவாக கொழுக்கட்டையைச் செய்து படைத்து வருகிறோம்.
`ஆன்மா என்ற இனிப்பான பூரணத்தைப் மறைத்து , இந்த உடலையே ஆண்டவருக்காக அர்ப்பணிக்கிறோம்’
என்பதே கொழுக்கட்டையின்
தத்துவம். ஞானபாலியை வைத்து விநாயகப் பெருமான் நம் ஒவ்வொருவரையும் சரணாகதி அடையச்
செய்துவிட்டான். பிள்ளையாரைப் பக்தியுடன் தொழுங்கள். உங்கள் மனதுக்கு பிடித்தபடி வாழ்க்கை
அமையும் என்பது உறுதி.