-->

பழனி முருகனின் சிலை ரகசியங்கள்


பழனி முருகன்


தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனின் அறுபடை வீடுகள் மொத்தம் ஆறு. அவற்றில் மூன்றாவது வீடு பழனி. இந்த கோவிலில் உள்ள மூலவர் முருகனின் சிலை மிகவும் பழமையானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு சிலையை இங்கு யார் செய்தார்? அந்த சிலை எந்த மாதிரியான பொருட்களை கொண்டு செய்யப்பட்டது, என்பது பற்றிய தகவல்களை இந்த பதிவில் நாம் விரிவாக பார்ப்போம்.

பழனி முருகன் சிலை


நவபாஷாணங்கள்


மூலவர் முருகன் சிலையானது நவபாஷாணங்கள் கொண்டு செய்யப்பட்டதாகும். நவபாஷாணங்கள் எனப்படும் ஒன்பது வகையான பாஷாணங்களை கட்டி இப்படி ஒரு அற்புதமான சிலையை அங்கு உருவாக்கினார் போகர் என்னும் சித்தர்.

வீரம், பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷாணம், வெள்ளை பாஷாணம், மிருதார்சிங், சிலாஜித் ஆகியவைதான் அந்த ஒன்பது பாஷாணங்கள். இவைதான் பிரதான பாஷாணங்களாகும். இது தவிர, மேலும் பல வஸ்துக்களையும், மூலிகைகளையும் கலந்து திரவ நிலைக் குழம்பைக் கெட்டியாக்கி திடப்பொருளாக மாற்றும் வித்தை போகருக்குத் தெரிந்திருந்தது. இந்த சிலையை செய்வதற்காக 4000க்கும் மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலிருந்து கொண்டு வந்தார் போகர்.

முருகன் சிலை தயாரிப்பின் போது போகரின் தலைமையின் கீழ் 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து, 81 வகையான வஸ்துக்களைக் கலந்து 9 கலவைகளாக்கிய பின் இந்தப் பாஷாணக்கட்டு செய்யப்பட்டது. இந்தக் கலவைகளை 9 விதமான எரிபொருளைக் கொண்டு காய்ச்சி, 81 முறை வடிகட்டி சுத்திகரிப்பு செய்யப்பட்டதாக அவரது பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது.

அந்த பாஷாணக் கலவையில் லிங்கம், செந்தூரம், ரசகற்பூரம், வெடி உப்பு, பாறையுப்பு, சவுட்டுப்பு, வாலையுப்பு, எருக்கம்பால், கள்ளிப்பால், வெண்காரம், பாதரசம், சங்குப்பொடி, கல்நார், பூநீர், கந்தகம், சிப்பி, பவளம், சுண்ணாம்பு, சாம்பிராணி, இரும்பு, வெள்ளீயம், அரிதாரம், குன்றிமணி போன்ற பல பொருட்களும் பயன்படுத்தப்பட்டன.


இந்த வகை பாஷாணங்களைக் கலந்து கலவையாகக் கட்டும் வரை அதைச் செய்பவர்கள் அந்த கலவையை சுவாசிக்கக் கூடாது. ஏனெனில் அவை அத்தனையும் மிக கொடிய விஷத்தன்மையானவை. அத்தனை சித்தர்களும் மூச்சை அடக்கி சில மணி நாழிகைகள் வரை சுவாசிக்காமல் இவ்வளவு பெரிய பணியை போகரின் வழிகாட்டுதல் மூலம் சிறப்பாக செய்து முடித்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மலைப்பாகவே இருக்கிறது.

இந்த சிலையை செய்து முடிக்க மொத்தம் 9 வருடங்கள் ஆனதாம். இந்த சிலை கொடிய விஷ கலவையால் செய்யப்பட்டாலும் இந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த வாசனை இருந்து கொண்டே இருக்குமாம்.


கல்லால் செய்யப்பட்ட எத்தனையோ சிலைகள் மற்றும் கோவில்கள் சிதிலமடைந்து போயுள்ளது. ஆனால் நவபஷணங்கள் கொண்டு செய்யப்பட்ட பழனி தண்டாயுதபாணி சிலை வருடங்கள் பல கடந்து இன்றளவும் உறுதியுடன் இருப்பதற்கு சித்தர்கள் மற்றும் அந்த முருகனின் மகிமைதான் காரணம்.


Previous Post Next Post