-->

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - துலாம்


குரு பெயர்ச்சி துலாம் ராசி


நல்ல எண்ணங்களை ஒருங்கே கொண்டு, தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருக்கும் துலா ராசி அன்பர்களே!

இது நாள் வரையில் 2 ஆம் இடத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களை தந்து கொண்டு இருந்த குரு பகவான். வாக்கிய பஞ்சாங்கப்படி 28.10.2019ம் தேதியும் திருக்கணிதப்படி 5.11.2019 தேதியும் உங்களது ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது ஒரு சுமாரான பெயர்ச்சி தான். இறை அருளால் மட்டுமே நற்பலன்களை உங்களால் அடைய இயலும். அதனால் அதிக அளவில் இறை வழிபாட்டைச் செய்யுங்கள். இனி வரும் காலங்களில் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் எதிர்நீச்சல் போட்டுத் தான் முன்னேறும் படியாக இருக்கும். எதிலும் நன்மை - தீமை கலந்த பலன்களே பெறுவீர்கள்.

குரு பெயர்ச்சி துலாம் ராசி 2019 பலன்கள்

பண வரவில் சுமாரான நிலை தான் காணப்படும். எனினும், குடும்ப தேவைகளை நல்ல படியாகப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். கொடுக்கல் - வாங்கல் போன்ற விவகாரங்களில் சற்று கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனால் பிறரை நம்பி பெருந்தொகையை கடனாகக் கொடுப்பதை தவிர்க்கவும். எனினும் பூர்வீக சொத்துக்களில் நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம். குரு 3 ஆம் இடத்திற்கு சென்று விட்டாலும் கூட குரு பார்வை சிலருக்கு நன்மையை தரும். அதனால் குரு பலமே இல்லாவிட்டாலும் கூட குரு ராசிக்கு 7 ஆம் இடத்தைப் பார்ப்பதால் சிலருக்குத் திருமணம் ஆகி விடும்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகம் இருக்கும். எனினும் இனி வரும் காலங்களில் மேலதிகாரிகள் உங்களை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்குவார்கள். அத்துடன் அவர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் இனி இருக்காது அல்லது குறையும். ஆனால், திருக்கணிதப்படி 24.1.20 இல் இருந்து உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பிக்க இருப்பதால் அதிக கவனமாக இருந்து கொள்ளுங்கள். உணவு விஷயத்தில் அதிக கட்டுப்பாட்டுடன் இருந்து கொள்ளுங்கள். ஜனவரி 2020 க்குப் பிறகு ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். பேச்சில் கூட அதிக நிதானத்தை கடைபிடிக்கவும்.

பெண்கள்:

உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தேவை இல்லாத மருத்துவ செலவுகளால் சிலருக்கு கையிருப்பு குறையலாம். எனினும், பணவரவு சுமாராக இருந்தாலும் கூட குடும்பத் தேவைகள் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அதனால் பொறுமையாக இருக்க முயற்சி செய்யவும். முடிந்த வரையில் பெரிய தொகையை எதிர்பார்த்து ஆடம்பர செலவுகளை செய்து விடாதீர்கள். காரணம், பொருளாதாரம் இந்தக் குரு பெயர்ச்சி முழுவதுமே ஏற்ற - இறக்கமாகத் தான் இருந்து வரும்.

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் காலத்தில் குறிப்பாக நடை பயிற்சி, யோகா போன்றவற்றை கூட மேற்கொள்ளுதல் நல்லது. இதனால் மருத்துவ செலவுகள் அவ்வப்போது இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஏற்படலாம். சனி பகவான் 2020 ஜனவரியில் இருந்து அர்த்தாஷ்டம ஸ்தானத்திற்கு செல்வதால் உணவு விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் நீங்கள் இருந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் மருத்துவ செலவுகள் ஏற்பட இடம் உண்டு. அலைச்சல் அதிகம் ஆக இருக்கலாம். இதனால் நேரத்திற்கு உண்டு - உறங்க முடியாத நிலை கூட பலருக்கு ஏற்படும்.

குடும்பம் மற்றும் பொருளாதார நிலை:

பணவரவு தேவைக்கு ஏற்ற படி இருந்து வரும் எனினும் வீண் விரயங்களை தவிர்க்க இயலாது. அதனால் இனி வரும் காலங்களில் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. 2020 ஜனவரிக்குப் பிறகு உங்களது தேவைகள் திடீர் என்று அதிகரிக்கலாம். இதனால் ஆடம்பர செலவுகளை முன்கூட்டியே யூகித்துக் குறைக்கப் பாருங்கள். கணவன் - மனைவி ஒற்றுமை குறையலாம். அவ்வாறு குறையாமல் பார்த்துக் கொள்ளுவது உங்களது கையில் தான் உள்ளது. குறிப்பாக கணவன் - மனைவி பிரச்சனைகளில் அந்நிய நபர்கள் தலையீட்டை தவிர்க்கவும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வழியில் கூட வீண் செலவுகள் ஏற்பட இடம் உண்டு. முன்கோபம் அடிக்கடி தோன்றும் அதனை குறைத்துக் கொள்வது நன்மை அளிக்கும்.

தொழில், வியாபாரம்:

கமிஷன், கான்டிராக்ட் போன்ற துறைகளில் ஈடுபடுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய கால கட்டம் ஆகும். குறிப்பாக யாருக்கும் ஜாமீன் தந்து விடாதீர்கள். சிலர் அது சம்பந்தமான பிரச்சனைகளில் சிக்க நேரிடலாம். நெருங்கியவர்களே உங்களை அதிகம் ஏமாற்றுவார்கள். இதனால் எல்லோர் மீதும் அவ நம்பிக்கை ஏற்பட இடம் உண்டு. முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்படலாம். எனினும் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். கொடுத்த கடனை பார்த்து நன்கு நிதானத்துடன் வசூல் செய்யப்பாருங்கள். மொத்தத்தில் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அவ்வப்போது மந்த நிலை வந்து செல்லும். எனினும் பெரிய அளவில் பொருட் தேக்கம் எல்லாம் ஏற்படாது. கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட இடம் உண்டு. தொழில் அல்லது வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளை சந்தித்து தான் நீங்கள் முன்னேறும் படியாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கொஞ்சம் தாமதப்படலாம். இந்த குரு பெயர்ச்சியில் இப்போதைக்கு பெரிய அளவில் முதலீடுகளில் ஈடுபடுவதை ஒத்தி வைப்பது நல்லது. கிரகங்கள் பெரும்பாலும் சாதகமாக இல்லை என்பதால் அதிக இறை வழிபாட்டை செய்ய வேண்டிய கால கட்டம் இது.

உத்தியோகஸ்தர்கள்:

பணியில் அவ்வப்போது நெருக்கடியான நிலையை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. உயர் அதிகாரிகளிடம் வாக்கு வாதம் செய்யாமல் இருந்து கொள்ளுங்கள். பிறர் செய்யும் தவறுகளுக்கும் கூட உங்களையே குறை கூறலாம். பொறுத்துக் கொள்ளுங்கள். கிரக சஞ்சாரம் சரி இல்லை என்பதால் வேலையை மட்டும் எக்காரணம் கொண்டும் விட்டு விடாதீர்கள். அதேபோல, புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வேலையை செய்வது நல்லது. உத்யோக ரீதியாக சிலர் குடும்பத்தை விட்டே கூட சில காலம் பிரியலாம். அத்துடன் உத்யோக ரீதியாக அதிக அலைச்சலை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியல்வாதிகள்:

நீங்கள் பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய தருணம். எனினும் சமூகத்தில் உங்களது மதிப்பு வழக்கம் போலவே இருக்கும். ஆனால், உங்களது செயல்பாடுகளை இனி வரும் காலங்களில் தலைமை உன்னிப்பாக கவனிக்கலாம். கோல் மூட்டுபவர்களால் செய்யாத தவறுக்கு நீங்கள் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை கூட வரலாம். அதனால் உடன் இருப்பவர்களிடம் பேசும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். மேடைப் பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள்.

விவசாயம் செய்பவர்கள்:

விளைச்சல் சுமாராகத் தான் இருக்கும். பொருளாதார நிலை சற்று ஏற்ற - இறக்கமாகத் தான் இருக்கும். சிலருக்குப் புதிய கடன்கள் கூட உருவாகலாம் என்பதால் பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள். பூமி, மனை, கால் நடைகள் சம்பந்தமாக வீண் செலவுகளை சிலர் சந்திக்க நேரலாம். அரசு வழியில் கூட எதிர்பார்க்கும் உதவிகள் தாமதம் அடைந்தே பின் கிடைக்கப்பெறும். உற்றார் - உறவினர்கள் மற்றும் பங்காளிகளை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டிய கால கட்டம். முடிந்த வரையில் வழக்குகள் ஏற்படாதவாறு பிரச்சனையை பேசித் தீர்க்கப் பாருங்கள்.

மாணவ - மாணவியர்:

கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல் பட்டால் மட்டுமே எதிர்பார்க்கும் வெற்றியை பெற இயலும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் சமயத்தல் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தேவை இல்லாத நட்புகளை முடிந்தவரையில் தவிர்க்கப் பாருங்கள். ஒவ்வொரு முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டு தான் நீங்கள் முன்னேறும் படியாக இருக்கும். எனினும் ஆசிரியர்கள் ஆதரவு தருவார்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 28.10.2019 முதல் 4.1.2020 வரை :

இந்தக் கால கட்டத்தில் ஓரளவு கிரகங்கள் சாதகமாக இருப்பதால் பிரச்சனைகளை திறம்பட சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு அல்லது மந்த நிலை காணப்படும் தான். பொருளாதார நிலையும் கூட ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். எனினும் எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கப்பெறும். இதன் காரணமாக கடைசி நேரத்தில் உங்களது தேவைகள் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். பேச்சில் மட்டும் அதிக நிதானத்தை கடைபிடிக்கவும். முடிந்த வரையில் பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உங்களுக்கு நன்மை தரும். பிறர் செய்யும் தவறுகளுக்கு கூட சில சமயங்களில் நீங்கள் பொறுப்பேற்கும் நிலை வரலாம். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகமாகத் தான் இருக்கும். எனினும் அவற்றை எல்லாம் சமாளித்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள். முடிந்த வரையில் தேவை இல்லாத பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டி வரும். பெண்கள் அந்நிய நபர்களிடம் பழகும் சமயத்தில் கூடுதல் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நன்மை தரும். அந்நியர்களிடம் குடும்ப விஷயங்களை பகிராமல் இருப்பது உங்களுக்கு நன்மை தரும்.

குரு பகவான் சஞ்சாரம் 5.1.2020 முதல் 7.3.2020 வரை :

எதிர் நீச்சல் போட்டு ஏற்றங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கூட கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். பணவரவில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை இருந்து வரும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை கடந்து முன்னேறுவார்கள். சிலருக்கு வெளிநாட்டு தொடர்புகளும் கூட கிடைக்கப்பெறும். கணவன் - மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். அதே போல, பெரிய முதலீடுகளை மட்டும் பார்த்துச் செய்யவும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கூட கூடுதல் கவனம் தேவை. திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தைகள் தாமதம் ஆகி அதன் பின்னர் இறுதியில் நடந்தேற இடம் உண்டு. மாணவர்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண் பெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கலாம்... எனினும் மேலதிகாரிகளின் தயவு அவ்வப்போது உண்டு.

குரு பகவான் சஞ்சாரம் 8.3.2020 முதல் 29.3.2020 வரை :

எதையும், எதிர்கொள்ளும் பலம் உங்களுக்கு கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவு தேவைக்கு ஏற்றபடி இருக்கும். முடிந்த வரையில் ஆடம்பர செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். எந்த ஒரு காரியத்திலும் நீங்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய தொகையை பிறரை நம்பி கடனாகக் கொடுப்பதை தவிர்க்கவும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகம் இருந்தாலும் கூட அதை எல்லாம் அவர்கள் திறம்பட சமாளித்து இறுதியில் வெற்றிக் கனியை பறிப்பார்கள். எனினும் எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கத் தாமதம் ஆகலாம். தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கூட போராடி இறுதியில் நல்ல லாபத்தை பெற்று விடுவார்கள். தொழில் போட்டிகள் இருந்தாலும் கூட இறுதியில் எதிர்பார்க்கும் லாபத்தை நீங்கள் அடைந்து விடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை ஏற்பட இடம் உண்டு. கல்வியில் கூட அதிக கவனம் செலுத்துவது நல்லது.

குரு பகவான் சஞ்சாரம் 30.3.2020 முதல் 14.5.2020 வரை :

இது குரு பகவான் அதிசாரமாக சஞ்சரிக்கும் காலம் என்பதால் பெரும்பாலும் மறைமுக எதிர்ப்புகள் அகன்று ஏற்றம் ஏற்படும். பணவரவு ஏற்ற - இறக்கமாக இருந்தாலும் கூட செலவுகள் கட்டுக்குள் அடங்கும். குடும்பத்தேவைகள் அனைத்தும் கூட நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். எனினும் சிலருக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வந்து போகலாம். இன்னும் சிலருக்கு வேறு ஏதேனும் ஆரோக்கிய கோளாறு காரணமாக செலவுகள் ஏற்பட இடம் உண்டு. மற்றபடி, உற்றார் - உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு அகலும். குடும்பத்தில் கூட மகிழ்ச்சியான சம்பவங்கள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். கொடுக்கல் - வாங்கலில் மட்டும் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தொழில், வியாபாரம் வெற்றி பெறும். புதிய வாய்ப்புகள் கூட தேடி வரும். எனினும் அதனை பயன்படுத்திக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை கூடும். எனினும் மாணவர்களைப் பொறுத்தவரையில் கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட வேண்டிய கால கட்டம் இது. பெண்களுக்கு சுப செலவுகள் அதிகம் ஏற்பட இடம் உண்டு. இதனால் கை இருப்புகள் கரையலாம்.

குரு பகவான் சஞ்சாரம் 15.5.2020 முதல் 12.9.2020 வரை :

குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து இருக்கும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் நல்ல திருப்பத்தைத் தரும். வீடு, மனை வாங்கக் கூடிய வாய்ப்பு சிலருக்கு அமையும். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது ஏற்ற - இறக்கம் காணப்பட்டாலும் கூட அன்றாடப் பணிகளை சிறப்புடன் செய்வீர்கள். பேச்சில் மட்டும் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கொடுக்கல் - வாங்கல் சகஜமாக இருந்து வரும். தொழில் அல்லது வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் பெருமளவில் குறையும் காலமாக இந்தக் காலம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தொடர்ந்து வேலை பளு அதிகம் காணப்பட்டாலும் கூட வேளையில் திறம்பட செயல்பட்டு நற்பெயரை தக்க வைத்துக் கொள்வார்கள். எனினும், புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வேலையை செய்வது நன்மை தரும். பயணங்களால் கூட அனுகூலம் உண்டு. மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கூட கிடைக்க இடம் உண்டு. அதே போல, கல்வியில் இருந்து வந்த மந்த நிலை இந்தக் காலத்தில் பெருமளவில் குறையும். பாடங்களை மெல்ல, மெல்லப் புரிந்து படிக்கத் தொடங்குவீர்கள். ராகு காலத்தில் மட்டும் துர்க்கையை அரளி சாற்றி அதிகம் வழிபட்டு வாருங்கள் நன்மை தரும்.

குரு பகவான் சஞ்சாரம் 13.9.2020 முதல் 30.10.2020 வரை :

இந்தக் காலத்தில் அலைச்சல் அதிகம் இருக்கலாம். நேரத்திற்கு உண்டு - உறங்க முடியாத நிலை காணப்படும். 23.9.2020 க்கு பிறகு கணவன் - மனைவி இடையே தேவை இல்லாத வாக்கு வாதங்கள் அதிகரிக்க இடம் உண்டு. இதற்கு அப்போது நடைபெற இருக்கும் ராகு/ கேது பெயர்ச்சி காரணம் ஆகலாம். அதே போல, வண்டி - வாகனங்களில் செல்லும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் சென்று வருதல் உங்களுக்கு நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டிய காலமாக இந்தக் கால கட்டம் இருக்கும். மற்றபடி பணவரவில் ஏற்ற - இறக்கமான சூழ்நிலை காணப்பட்டாலும் கூட அதனை சமாளித்து விடுவீர்கள். எனினும், திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் தாமதம் ஆகலாம்.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் மற்றும் போட்டிகள் அதிகரிக்கலாம். இதனால் வருமானத்தில் கொஞ்சம் தளர்வு ஏற்பட இடம் உண்டு. எனினும் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் கூட இறுதியில் பொருள் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளை முடிந்த வரையில் தவிர்க்கப் பாருங்கள். மாணவர்கள் தேவை இல்லாத நட்புகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனத்தை செலுத்துவது அவர்களுக்கு நன்மையை செய்யும். குறிப்பாக வண்டி - வாகனங்களில் செல்லும் சமயத்தில் இனி வரும் காலங்களில் வித்தைகள் காட்டக் கூடாது. துர்க்கையை ராகு காலத்தில் அரளி சாற்றி வழிபட்டு வாருங்கள். இது உங்களுக்கு நன்மையை செய்யும்.

குரு பகவான் சஞ்சாரம் 31.10.2020 முதல் 20.11.2020 வரை :

எந்த ஒரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளவும். மருந்தே விஷம் ஆகும் என்பதால் காலாவதி தேதியை பார்த்து உண்ணுங்கள். அதேபோல, மருத்துவர் அறிவுரை இன்றி மருந்துகளை நீங்களாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்கு நன்மையை தரும். பணவரவு ஓரளவே திருப்தி தரும். முடிந்த வரையில் ஆடம்பர செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகையை ஈடுபடுத்தாமல் இருப்பது உங்களுக்கு நன்மையை செய்யும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் வர கடுமையாக நீங்கள் பாடு பட வேண்டி இருக்கும். முடிந்தவரையில் தேவை இல்லாத பயணங்களை இனம் கண்டு தவிர்க்கப் பாருங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதம் ஆகலாம். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படலாம். மாணவர்கள் தேவை இல்லாத பொழுது போக்கை தவிர்த்து படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலமாக இந்தக் காலம் காணப்படுகிறது. அதிலும், குறிப்பாக சங்கடம் தரும் மோசமான நட்புக்களை இனம் கண்டு தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

கோளறு பதிகம் தொடர்ந்து படித்து வாருங்கள். வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து குல தெய்வத்தை வணங்குவது கூட சிறப்பைத் தரும். இவை தவிர குரு அருளைப் பெற ஏழை எளிய மாணவர்களுக்கு உதவலாம். 24.1.20 முதல் அர்த்தாஷ்டம சனி ஆரம்பம் ஆகப் போவதால் சனி பகவானை கோயிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இதனை ஒரு சனிக் கிழமையில் செய்வது சிறப்பு. அதே போல ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவலாம். வாய்ப்பு கிடைத்தால் திருநள்ளாறு கூட சென்று வாருங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் : மகா லக்ஷ்மி

ராசியான திசை : தென்கிழக்கு

ராசிக்கல் : வைரம்

ராசியான கிழமை : வெள்ளி

ராசியான நிறம் : வெள்ளை
ராசியான எண்கள் : 5,6,8

Previous Post Next Post