கறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
கறிவேப்பிலை நாம் அன்றாடும் சமையலில் வாசனைக்காகப்
பயன்படுத்தப்படும் ஒருவகை கீரையாகும். கறிவேப்பிலை நல்ல மணமும் சுவையும் கொண்டது.
இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக் கொண்டிருக்கும். “கறிவேம்பு
இலை” என்ற சொல் தான் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. இதன்
பூக்கள் வெண்மை நிறத்திலும் பழங்கள் கருப்பு நிறத்திலும் இருக்கும்.
கறிவேப்பிலையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நாட்டுக்
கறிவேப்பிலை மற்றொன்று காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலையானது உணவிலும்,
காட்டுக் கறிவேப்பிலையானது மருந்துகள்
தயாரிக்கவும் பயன்படுகின்றது.
கறிவேப்பிலை ஒரு சத்து நிறைந்த கீரையாகும். இதில் 63 சதம்
நீரும், 6.1 சதவீதம் புரதமும், ஒரு
விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும்,
6.4 சதவீதம் நார்ச்சத்தும், 18.7 சதவீதம்
மாவுச்சத்தும் இருக்கின்றன.
இந்த கீரை 108 கலோரி சக்தியை கொடுக்கிறது. சுண்ணாம்பு சத்து, மக்னீசியம், மணிச்சத்து, இரும்பு
சத்து, தாமிர சத்து, கந்தக சத்து
மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் முதலியன சத்தும் இந்த
கீரையில் உள்ளது. கறிவேப்பிலை மரத்தின் இலை, பட்டை, வேர் முதலியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
கறிவேப்பிலை மருத்துவ பயன்கள்
1. கறிவேப்பிலையை தினமும் உட்கொண்டால் குமட்டல், சீதபேதியால்
வரும் வயிற்று பிரச்சனைகள், நாள்பட்ட காய்ச்சல் போன்றவை நீங்கும்.
2. கறிவேப்பிலையில் உயிர்சத்து மிகுதியாக உள்ளது. இது உடலுக்கு
பலத்தை கொடுக்கிறது.
3. கறிவேப்பிலை பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. இது பித்தத்தைத்
தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது.
4. கறிவேப்பிலையின்
இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து கொடுத்தால் பித்தம், வாந்தி
நீங்கும். உலர்த்திய கறிவேப்பிலையை இத்துடன் மிளகு, உப்பு,
சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி
சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலக்கட்டு நோய்கள் குணமாகும்.
5. உடலில் உள்ள கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது: நல்ல
கொழுப்பின் அளவை அதிகப்படுத்துகிறது.
6. கறிவேப்பிலை உடலுக்கு பலத்தை கொடுக்கக்கூடியது. பசியைத்
தூண்டும் சக்தி வாய்ந்தது.
7. கறிவேப்பிலையை உணவோடு சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு இதய
தசைகள் வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாவது
தடுக்கபடுகிறது.
8. இரத்த சோகை கொண்டவர்கள், கறிவேப்பிலையை
பொடி செய்து சுடுநீர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டு வர, இரத்த சோகை விரைவில் குணமாகும்.