-->

எண்ணெய்கள் ஒரு பார்வை



இன்றைய நவீன யுகத்தில் பளபளப்பாக இருக்கும் எல்லாமே நல்லதாக  மற்றும் தூயதாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கும் போது, அதில் எண்ணெய் மட்டும் விதிவிலக்காகுமா? நீரின்றி அமையாது உலகு என்பதுபோல எண்ணெயில்லாமல் அமையாது உணவு என்று சொல்வது பொருத்தமானதுதான்.



நம் நாட்டில் இன்று ஏற்படும் முக்கால்வாசி மரணங்களுக்கு காரணம் இதயநோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்றவை. இந்த நோய்கள் நமக்கு வருவதற்கு காரணம் நாம் உணவில் பயன்படுத்தும் எண்ணெய்கள் தான் மிக முக்கிய காரணம்.

முன்பெல்லாம் எண்ணெய் தயாரிக்க செக்குதான் பயன்படுத்துவார்கள். பெரிய கல் உரலில் வாகை மரத்தால் ஆன செக்கில் மாடுகளை பூட்டுவார்கள். மாட்டை செக்கின் முனையில் கட்டிச் செக்கை சுற்றி வரச் செய்வார்கள். மாடு சுற்றும்போது செக்கும் சுற்றும். இப்படித்தான், எண்ணெயைப் பிழிந்து எடுப்பார்கள். இப்படி இயற்கை முறையில் எடுக்கப்பட்ட எண்ணெய்கள் எல்லாமே உடலுக்கு நன்மை தரும் நல்ல எண்ணெய்களாக சுத்தமானதாக இருந்தன.  

நம் முன்னோர்கள், நிலக்கடலையிலிருந்து கடலை எண்ணெய், கறுப்பு எள்ளிலிருந்து நல்லெண்ணெய், தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய், முத்துக்கொட்டையிலிருந்து விளக் கெண்ணெய், அரிசித் தவிட்டிலிருந்து தவிட்டு எண்ணெய், கடுகிலிருந்து கடுகு எண்ணெய் என பல எண்ணெய்களை பிரித்தெடுப்பார்கள்.

பொரிக்க, வறுக்க கடலை எண்ணெய். தாளிக்க, சமைக்க உடலை பொலிவாக்க எண்ணெய்க் குளியலுக்கு நல்லெண்ணெய். வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் சில குறிப்பிட்ட சமையலுக்கு தேங்காய் எண்ணெய். உடல் உஷ்ணத்தைத் தணிக்கவும், உடலில் உள்ள அழுக்கை நீக்கவும் உள்ளுக்கு விளக்கெண்ணெய் என எந்த மருத்துவரும் சொல்லாமலேயே அனைத்து எண்ணெய்களையும் சரியான நேரத்தில் உடலில் நல்ல கொழுப்புகளையும் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் முன்னோர்கள். 

ஆனால் இன்றோ நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் அனைத்தும் பல்வேறு வேதி பொருட்கள் கலக்கப்பட்டு மிகவும் வெப்பத்தில் தயாரிக்கப்படுகின்றன. இவை கலப்படமிக்க எண்ணெய் என்பது ஒருபுறம் இருக்கட்டும், இந்த எண்ணெய்களை தயாரிக்கும் முறைகளும் ஆரோக்கியத்தைக் குறைத்து, கேடு தரும் என்பதே கசப்பான உண்மை. வேதிப்பொருள்கள் கலக்கப்பட்டு சுத்திகரிக்கப்படும் எண்ணெயின் நிறம், வழவழப்பு தன்மையை நீக்குவதற்கு காஸ்டிக் சோடா, கந்தக அமிலம், ப்ளீச்சிங் பவுடர் என உபயோகப்படுத்துகிறார்கள்.

இந்த வேதிப் பொருள்கள் நீக்கப்பட்ட பிறகே பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு வருகின்றன என்றாலும் முழுமையாக நீங்காமல் குறிப்பிட்ட சில சதவீதம் அந்த எண்ணெயில் அப்படியே தங்கிவிடுகின்றன. உடலை பாதிக்காத வகையில் குறைந்த அளவு என்றாலும் தொடர்ந்து இந்த எண்ணெய்களைப் பயன்படுத்தும்போது அவை உடலில் இருக்கும் சத்துக்களை வலுவிலக்கச் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

என்னென்ன எண்ணெய்கள் எந்த மாதிரியான நன்மை மற்றும் தீமைகளை கொண்டிருக்கின்றன என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.

Previous Post Next Post