ஆலயம்
இறைவனின் உறைவிடம் தான் ஆலயம். ஆலயங்களுக்கு சென்று வரும்போது கீழ்கண்டவைகளை வழக்கமாக்கி கொண்டால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். வாழ்க்கை வளம் பெறும். அந்த வகையில் எல்லோரும் கடை பிடிக்க வேண்டிய சில நியதிகள் பின் வருமாறு,கோவிலுக்கு செல்லும்போது செய்ய வேண்டியவை
1. கோவிலுக்கு செல்லும் போது குளித்து, தூய்மையான ஆடை
அணிந்து தான் செல்ல வேண்டும்.
2. ஆலய கோபுரத்தை கை கூப்பி வணங்க வேண்டும்.
3. பிறகு அந்தந்த கோவில் தல பிள்ளையாரை வணங்கி உள்ளே செல்ல வேண்டும்.
4. கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை வழிபட வேண்டும்.
5. இதைத் தொடர்ந்து துவார பாலகர்களை வழிபட்டு கருவறை முன்புள்ள கணபதியை வணங்க வேண்டும்.
6. பிறகு கருவறையில் இறைவனை கண்ணார கண்டு, மனதில் இருத்தி வழிபட வேண்டும்.
7. அர்ச்சகர் தரும் திருநீறை கீழே சிந்தாமல் நெற்றியில் பூசி உடன் இறைவனின் பெயரை உச்சரித்தபடி கருவறையை 3 தடவை வலம் வந்து வழிபடுதல் வேண்டும்.
8. முதல் முறை வலம் வரும் போது அம்பாள் சன்னதி, உற்சவர், நடராஜரை வழிபட வேண்டும்.
9. இரண்டாம் தடவை வலம் வரும்போது, முருகன், நவக்கிரகம், பைரவர், அறுபத்து மூவரை வழிபட வேண்டும்.
10. மூன்றாம் முறை வலம் வரும்போது தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டீகேசுவரரை வழிபட வேண்டும்.
11. சண்டீகேசுவரரை வழிபாடு செய்தால்தான் ஆலய வழிபாடு முழுமை பெறுவதாக அர்த்தம். இதையடுத்து மீண்டும் கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி, சிறிது நேரம் வடக்கு முகமாக அமர்ந்து விட்டு வீடு திரும்ப வேண்டும்.
12. கோவில்களில் முக்கியப் பூஜைகளை நல்ல நேரம், திதி, ஹோரை பார்த்து செய்வது நல்லது.
13. கோவில் விளக்குகளில் எண்ணை ஊற்றி எரிய வைத்தல், புதிய விளக்குகளை ஏற்றி வைத்தல், சிறியதாக எரியும் விளக்கு திரிகளை சரி செய்து எரிய தூண்டுவது போன்றவை புண்ணிய காரியமாக கருதப்படுகிறது.
14. முடிந்தால் சனிக் கிழமையில் கோயில் தீபங்களுக்கு நல்லெண்ணெய் வாங்கித் தாருங்கள். இதனால் சனி தோஷம் அகலும்.
15. சிவன் கோவில்களில் முதலில் சிவனை வழிபட்ட பிறகே சக்தியை வழிபட வேண்டும்.
16. விஷ்ணு கோவிலுக்குச் சென்றால் முதலில் மகாலட்சுமியை வழிபட்ட பிறகே விஷ்ணுவை வணங்க வேண்டும். விஷ்ணுவை வழிபடும் போது முதலில் பாதத்தை பார்த்து படிப்படியாக முகம் வரை பார்த்து வணங்க வேண்டும். மகாலட்சுமியை வணங்கும் போது முதலில் கண்களை பார்த்து படிப்படியாக பாதம் வரை பார்த்து வழிபாடு செய்தல் வேண்டும். அதுவே ஆகம விதி.
17. ஆலயத்தில் இருந்து வீட்டுக்கு புறப்படும் போது சற்று அமர்ந்து செல்ல வேண்டும். ஏனெனில் சிவாலயங்களில் இருக்கும் 7 சிரஞ்சீவிகள் தங்கி இருந்து சிவதரிசனம் செய்பவர்களை அவர்கள் வீடு வரை பின்தொடர்ந்து வந்து மரியாதை செய்வதாக சொல்வார்கள். இவ்வாறு முறைப்படி ஆலய தரிசனம் செய்தால் முழுப் பயனையும் பெற முடியும்.
கோவிலுக்கு செல்லும்போது செய்ய கூடாதது
1. கோபம், பழி உணர்வு, வெறுப்பு போன்றவற்றை மனதில் வைத்துகொண்டு கோவிலுக்கு செல்ல கூடாது, அப்படி சென்றால் அது பாவம்.
2. குளிக்காமலும், தூய உடை அணியாமலும் ஆலயம் செல்லுதல் பாவம்.
3. குங்குமம், திருநீறு போன்றவற்றை நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமலும் கோவிலுக்குச் செல்லக்கூடாது.
4. அசைவ உணவு சாப்பிட்டு விட்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது.
5. சுவாமி சந்நிதிகளை அவசர, அவசரமாக சுற்றி வருதல் கூடாது.
6. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது.
7. சட்டை அணிந்து கொண்டோ அல்லது போர்த்திக் கொண்டோ செல்லக்கூடாது. சட்டை அணியாமல் சென்றால், இறைவனின் ஈர்ப்பு அலைகளை நம் உடம்பு முழுமையாக பெற முடியும்.
8. சிவன் கோயில்களில் உள்ள சண்டிகேசுவரர் சிவ சிந்தனையில் இருப்பவர். எனவே அவர் முன் நின்று கை தட்டுவது, சொடுக்கு போடுவது கூடாது. அவர் மீது நூலினை போடுவதும், விபூதி, குங்குமத்தை போடுவதும் கூடாது.
9. விபூதி, சந்தனம், அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்கக்கூடாது.
10. கோவிலின் உள்ளேயோ, மதில் சுவர்களிலோ எச்சில் துப்புதல் கூடாது. அது மகா பாவம்.
11. கோவிலின் உள்ளே சண்டை போடுதல், தலை வாரி முடித்தல், சூதாடுதல், சிரித்தல், காலை நீட்டிப் படுத்துக் கொள்ளுதல் போன்றவை கூடாது.
12. இறைவனுக்கு நைவேத்தியம் ஆகும் போது பார்க்கக்கூடாது.
13. சுவாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போகக்கூடாது. சிவ மூலவ, ரூபங்களை தொடுதல் அல்லது மிதித்தல் கூடாது.
14. கோபுரம், கொடிமரம், பலிபீடம், விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.
15. காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக்கூடாது.
16. வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது.
17. மரணத்தீட்டு உள்ளவர்களை தொட்ட பின் குளிக்காமல் கோவிலுக்குச் செல்லக்கூடாது.
18. பிரகாரங்களை வலம் வரும் சமயத்தில் இறைவனுக்கு சாத்தப்பட்ட திருநீறு, வில்வம், மலர்களை மிதித்து விடக்கூடாது.
19. ஈரமான உடையுடனோ அல்லது அழுக்கு குறைவான உடையுடனோ கோவிலுக்குச் செல்லக்கூடாது.
20. கோவிலுக்கு செல்லும்போது தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்ல வேண்டும்.
21. சுவாமி சிலைகளை தொட கூடாது.
22. கோவிலில் உள்ள விளக்குகளைக் கையால் தூண்டவோ, தூண்டிய கையில் உள்ள எண்ணெய் கறையை சுவரில் துடைக்கவோ கூடாது.
23. ஆலயத்துக்குள் யார் காலிலும் விழுந்து வணங்க கூடாது. காரணம் அங்கு இறைவன் ஒருவரே மகா பெரியவர்.
24. ஆலய வழிபாட்டுக்கு குடும்பத்தோடு சென்று வருவது நல்லது. பரிகார தலங்களுக்கு சென்றால் வேறு யார் வீட்டுக்கும் செல்ல கூடாது.
25. எந்த ஒரு வெளியூர் ஆலயத்துக்கு செல்லும் முன்பும் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
26. பொழுதுபோக்கிற்காக ஆலயத்துக்கு செல்ல கூடாது.
27. ஆலயங்களுக்கு செல்வதற்கு முன் ஒரு நாளும், பின் ஒரு நாளும் இறந்தவர் வீட்டுக்கு செல்லாதீர்கள்.
28. ஆலயத்தில் தெய்வ சந்நிதியில் திரை போட்ட பிறகு கும்பிடகூடாது.
29. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரம் சொல்லும் போது, மற்றவர்களின் அமைதி கெடாதபடி மனதுக்குள் உச்சரிப்பது நல்லது.
30. மூலவருக்கு தீபாராதனை நடக்கும் போது கண்ணை மூடி வணங்காதீர்கள். இறைவனை கண் குளிர தரிசித்து வழிபடுங்கள். காலையில் விஷ்ணுவையும், மாலையில் சிவனையும் வழிபடுவது மிகுந்த பலனை தரும்.
31. ஆலயங்களில், சன்னதிக்கு பின்புறம் அமர்ந்து தியானம் செய்யகூடாது.
32. ஆலயத்துக்குள் இருந்து கொண்டு மற்றவர்களிடம் தற்பெருமை பேசுதல் கூடாது. ஆலயத்துக்குள் வந்து விட்டால் மனம் முழுவதும் இறைவனிடமே இருக்க வேண்டும்.
33. ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக வெளியே அமர்ந்திருக்கும் ஏழை எளியவர்களுக்கு பணத்தை தானமாக வழங்குங்கள். அப்படியாக தானம் செய்த பலனுடன் இறைவனை சென்று பார்ப்பது விசேஷம். மாறாக, கோவிலிருந்து வெளியே வரும் போது தானம் செய்யாதீர்கள்.
34. ஆலயத்தின் பிரதான வாயில் தவிர மற்ற வாயிலில் கோவிலுக்குள்ளே செல்லக்கூடாது.
35. கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும் போது தெய்வத்தை வணங்கக் கூடாது.
38. இரு சக்கர வாகனங்களில் மற்றும் காரில் பயணம் செய்யும் போது கோவிலுக்கு உள்ளே செல்லாமல் வெளியே இருந்து சுவாமியை கும்பிட கூடாது. இது தெய்வத்தை அவமதிக்கும் செயலாகும்.
39. பிறர் பொருட்களைக் கொண்டு
இறைவனுக்கு நைவேத்தியம் செய்யக்கூடாது.
காலை நேரத்தில் கோவிலை சுற்றும்
போது உடல் நலம் விருத்தியாகும். மாலை நேரத்தில் கோவிலை வலம் வருவதால் செய்த
பாவங்கள் எல்லாம் தொலையும். இரவு நேரத்தில் சுற்றுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும்
என நம்பப்படுகிறது.