-->

தில ஹோமம் என்றால் என்ன? யாரெல்லாம் செய்ய வேண்டும்


தில ஹோமம் என்றால் என்ன?


பொதுவாக மரணம் என்பது யாருக்கு எப்போது வரும் என்று சொல்ல முடியாது. நேற்று கூட அவரை பார்த்தேன், ஆனால் இன்று மரணம் அடைந்து விட்டார் என சொல்ல கேட்டு இருப்போம். அந்தளவு மரணம் வயது வித்தியாசம் பார்க்காமல் வரும். 

பித்ரு தோஷம் நீக்கும் ஹோமம்


அதிலும், குறிப்பாக விபத்துகளினால் மரணம் நேரும் போது பல நேரங்களில் உடல் சிதைந்து தகனம் செய்ய முடியாத நிலையை அடைந்து விடுவதால் அந்த உடலுக்கு பிரேதங்களுக்கு சரியான முறையில் சம்பிரதாயங்கள் செய்யப்படுவதில்லை. அது போன்ற ஆன்மாக்கள் அந்த அஸ்தி இருக்கும் இடத்தையே ஆவிகளாக மாறி சுற்றிவருகின்றன. இந்நிலையில், அந்த ஆன்மாவிற்கு  மோட்சம் கிடைத்து பித்ரு லோகத்தை அடைய செய்யப்படும் ஹோமமே ‘தில ஹோமம்’ ஆகும்.

இது பிரேத தோஷம் மற்றும் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடவும், மரித்த முன்னோர்கள் நற்கதி அடையவும் கருப்பு எள்ளை முக்கிய பொருளாக கொண்டு முறையாக அக்னியில் செய்யப்படும் ஹோமம் ஆகும்.

தில ஹோமம் எப்போது செய்ய வேண்டும்?


கிருஷ்ண பட்சம், சனிக்கிழமை, அமாவாசை, பரணி நட்சத்ரம், குளிகன் இருக்கும் ராசி ஆகிய நாட்கள் திலஹோமம் செய்வதற்கு ஏற்ற நாட்கள் ஆகும். ஆனால் தில ஹோமத்தை தேவையில்லாமல் செய்யக்கூடாது, யாருக்குத் தேவையோ அவர்கள்தான் தில ஹோமத்தைச் செய்ய வேண்டும். தில ஹோமம் செய்ய வேண்டிய தேவை உள்ளதா? என்பதை தக்க நபரிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஜாதகம் மூலம் பித்ரு தோஷம் இருப்பதை உறுதி செய்த பின்னரே தில ஹோமம் செய்ய வேண்டும்.

ஹோமங்களிலேயே இது ஆபத்தான ஹோமம் ஆகும். காரணம் இது இறந்த ஆத்மாக்களுடன் தொடர்புடையது. அதனால் நல்ல அனுபவம் வாய்ந்த புரோகிதர்களை வைத்து இந்த ஹோமத்தை செய்வது நல்லது.

பித்ரு தோஷம் மற்றும் பிரேத தோஷம் ஆகியவை இந்த தில ஹோமத்தால் விலகும் என்பது நம்பிக்கை. அது மட்டும் அல்லாமல்... பித்ரு தோஷத்தால் ஏற்படும் குழந்தையின்மை, அல்லது குழந்தை உருவாகாது இருத்தல், கர்ப்பம் தங்காது இருத்தல், பிறந்த குழந்தை மரித்தல் போன்ற தோஷங்கள் ஏற்படலாம். இப்படிப்பட்ட தோஷங்களைப் போக்கவும் தில ஹோமம் செய்யப்படுகிறது.

தில ஹோமத்தை யாரெல்லாம் செய்யலாம்


1.
ஜன்ம லக்னத்திலிருந்து புத்ர ஸ்தானத்தில் (ஐந்தாமிடத்தில்) சனி இருந்தாலோ அல்லது ஐந்தாமிடத்துக்கு சனி பார்வை இருந்தாலோ, புத்ர காரகனான குருவுக்கு சனியின் சேர்க்கை - பார்வை - இருந்தாலோ குழந்தை பாக்யம் இருக்காது. அல்லது குழந்தைகள் தங்காது, இது பித்ரு தோஷத்தால் ஏற்படுகிறது என்பதால் இப்படிப்பட்ட பித்ரு தோஷத்துக்கு தில ஹோமம் செய்வது சிறந்ததாகும்.

2.
ஜெனன ஜாதகத்திலோ அல்லது பிரசன்ன ஜாதகத்திலோ மாந்தி இருக்கும் நிலையை வைத்து பிரேத தோஷத்தை அறியமுடியும். மேலும் மாந்தி எந்த கிரகத்தோடு சேர்க்கை பெற்றிருக்கிறதோ அந்த கிரக சம்மந்த உறவினால் பிரேத தோஷம் ஏற்பட்டிருப்பதை அறியமுடியும்.

3.
ஜோதிட ரீதியாக சூரியன் மற்றும் சந்திரனோடு ராகு கேது சேர்க்கை, 1-5-9 ஆகிய வீடுகளில் ராகு மற்றும் கேது நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை குறிக்கும்.

தில ஹோமம் யார் செய்ய வேண்டும்

தில ஹோமத்தை எங்கு செய்ய வேண்டும்


இந்தத் தில ஹோமத்தை காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணியத் திருத்தலங்களில் செய்வது மேலும் விசேஷம் தரும். எனினும், இந்த ஹோமம் பிரேத ஆத்மாக்களை மந்திர உச்சாடனத்தால் அழைத்து பொம்மையில் ஆவாஹனம் செய்து, அந்த ஆத்மாவானது மோட்சம் பெற சக்தி வாய்ந்த வேத மந்திரங்களை ஓதி சொல்லப்படுவதால். இதனை வீட்டில் செய்தல் பெரும் துக்கத்தை தரும். அதற்கு பதில் சுத்தமான நதிக்கரை, குளக்கரை, தூய்மையான வெட்ட வெளி மற்றும் பொதுவான இடங்களில் இந்த ஹோமத்தை செய்தல் என்பது விசேஷம்.

இந்த ஹோமத்தின் இறுதியில், இறந்த முன்னோர்களை பிரேத ஸ்வரூபத்திலிருந்து விடுபட்டு பித்ருக்களுடன் ஒன்றாக சேர்ப்பிக்கும் விதமாக பித்ரு பொம்மைகளை கடலிலோ அல்லது கடலில் கலக்கும் புண்ணிய நதிகளிலோ கரைத்துவிட்டு தண்ணீரில் முழ்கி எழ வேண்டும். இதனால் பித்ரு தோஷம் விலகும்.

Previous Post Next Post