-->

எள் தரும் ஏராளமான நன்மைகள்


எள்

எள் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். எள் உணவிலும், மருத்துவத்திலும் அதிகம் பயன்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கருப்பு எள், சிவப்பு எள், பழுப்பு அல்லது மஞ்சள்  நிற எள் என நான்கு வகைகள் உள்ளன. வெள்ளை எள்ளில் எண்ணெய் அதிகம் எடுக்கபடுகிறது. கறுப்பு எள், உணவுப் பொருளாகவும், மருந்து பொருள்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.

எள்ளின் மருத்துவ குணங்கள்


இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய வகை செடியாகும். இதற்குத் ‘திலம்’ என்ற பெயரும் உண்டு. இதில் இருந்து தான் எண்ணெய்க்கு ‘தைலம்’ என்று பெயர் வந்தது. எள் லேசான கசப்பு துவர்ப்புடன் சுவை கொண்டது, ஜீரணமாகும்போது இனிப்பாக மாறும் தன்மை கொண்டது. உடலின் எடை கணிசமாக உயரும். இதனால்தான் நம் முன்னோர்கள் ‘இளைத்தவனுக்கு எள்ளு , கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்று சொல்லி வைத்தார்கள். எள் தோலுக்கும் பற்களுக்கும், தலைமுடிக்கும் உறுதியை தருகிறது.

நல்லெண்ணெய்

எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனப்படுகிறது. ஆனால் இதை நல்லெண்ணெய் என்று அழைப்பார்கள். எள் செடியின் இலை, பூ, காய், விதை என அனைத்தும் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. எள் வறண்ட பகுதியிலும் செழிப்பாக வளரக் கூடியது. இதைப் பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் தன்மை இந்த எள் செடிக்கு உண்டு.

எள்ளில் உள்ள சத்துக்கள்

எள்ளில் அதிகளவு தாமிரச்சத்து, மக்னீசியம், சுண்ணாம்புசத்து, இரும்புச்சத்து, ஜிங்க், வைட்டமின் பி1, நார்ச்சத்து போன்றவை அடங்கியுள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்திற்கு நன்மை அளிக்கும். மேலும் அரை கப் எள் ஒரு கப் கால்சியத்திற்கு நிகரானது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த எள்ளில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

எள்ளின் மருத்துவ பயன்கள்

1. உடலின் உள் உறுப்புகளுக்கு பலமும், சுறுசுறுப்பும் உண்டாகும். மூளைக்குத் தெளிவைத் தரும்.

2. மலத்தை இறுக்கும். வாயு பிரச்சனையால் ஏற்படும் விறைப்பு, வலி முதலியவற்றைப் குறைக்கும்.

3. எள் ஒரு நல்ல உணவுப் பொருளாகும். எள்ளுப் பொடி சேர்த்துப் பிசைந்த சாதம் சாப்பிட, வயிற்றில் ஏற்படும் கொதிப்பு, வயிற்றில் உள்ள வலி இவற்றைப் போக்கும். உடலுக்கு பலம் தரக்கூடியது.

கருப்பு எள் குணங்கள்


4. எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் சிறிது நேரம் வைத்திருந்து பின்பு துப்பினால் வாய்ப்புண் ஆறும்.

5. எள்ளை இடித்துத் தூளாக்கி வெண்ணெய்யுடன் சேர்த்துச் சாப்பிட, ரத்த மூலத்திலிருந்து ரத்தம் வருவது நிற்கும். மலம் சிக்கலில்லாமல் வெளியாகும். மூல வலியின் வேதனை குறையும்.

6. பற்கள் ஈறுகள் தாடை இவற்றில் பலக் குறைவுள்ளவர் விதையை மென்று குதப்பிக் கொண்டிருப்பதாலும், நல்லெண்ணெய்யை வாயிலிட்டு குதப்பிக் கொண்டிருப்பதாலும் நன்மை பெருகும்.

7. எள்ளை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் சிறுநீர் வெளியேறுவது அதிகமாகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எள் கலந்த உணவைச் சாப்பிட்டால் உடலின் சர்க்கரை அளவு குறையும்.

8. எள் உணவு உடலுக்கு பலத்தைத் தருகிறது. பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்பால் உருவாகுவது குறைவாக உள்ளது போல தோன்றினால் எள் கலந்த உணவை சாப்பிட்டால் தாய்பால் சுரப்பு அதிகரிக்கும். எள்ளை ஊற வைத்த தண்ணீரை அருந்தி வந்தால் உதிர போக்கு பிரச்சனை விரைவில் குணமாகும்.

9. எள்ளையும், கருஞ்சீரகத்தையும் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி குறையும்.

10. எள்ளுருண்டை, எள்ளும் உளுந்தும் சேர்ந்த கொழுக்கட்டை இவற்றைத் தொடர்ந்து கொடுக்க பூப்பெய்தல் சீக்கிரம் ஏற்படும்.

11. எள்ளின் கஷாயத்தால் இடுப்பு அடி வயிறுகளில் ஒத்தடம் கொடுக்க, அடிவயிற்று வலி, இடுப்பு வலி போன்றவை நீங்கும். பனைவெல்லம், எள், கருஞ்சீரகம் இம்மூன்றும் மாதவிடாய் காலத்திலேயே, வலி கடுப்பு உதிரச் சிக்கல் நீங்க மிகவும் பயன்படுகின்றது.

கப, பித்த தோஷங்களை அதன் அதிக அளவிலான உபயோகம் செய்வதால் கப, பித்த நோயாளிகள் அதை அதிகம் பயன்படுத்தக்கூடாது.
Previous Post Next Post