புளி
புளிப்பு சுவை அறுசுவைகளில்
ஒன்று. தென்னிந்திய சமையலில் புளி இல்லாத குழம்பை பார்ப்பது அரிது. சாம்பார், ரசம் என அனைத்தும் புளி சேர்க்கவில்லை என்றால் ருசிக்காது. நாம்
சாப்பிடக்கூடிய சாப்பாட்டில் உப்பு, புளி, காரம் கட்டாயம் இருக்கும். அதில் முக்கியமாக புளி இல்லையென்றால், பல நேரம் உணவு ருசி இருக்காது. அதே புளிக்கு நிறைய மருத்துவக் குணங்கள்
உண்டு. புளியை உணவில் சேர்க்காமல் வெறுமனே சாப்பிடுபவர்களும் உண்டு.
புளிய மரம்
வெப்ப மண்டல மரமான புளியமரம் வறட்சியை தாங்கி வளரும். ஓரளவு வளர்ந்தபின் இதற்கு தண்ணீர் தேவையில்லை. புளிய மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள், பழத்தின் கொட்டைகள், பட்டைகள் அதன் பிசின்கள் என அனைத்தும் பலன் தரக்கூடியவை. அதன் மரம் உறுதிமிக்க மரச்சாமான்கள் செய்ய பயன்படுகின்றன.
அப்படிப்பட்ட
புளி புளிய மரத்தில் இருந்து நமக்கு புளி கிடைக்கிறது. புளிய மரம், மனிதருக்கு நிழல்கள் மட்டும் தருவதில்லை, உணவில்
சுவைக்காகவும், உடல் நலத்திற்காகவும், சேர்க்கப்படும்
ஒரு முக்கிய உணவு பொருளாகவும் திகழ்கிறது. கிட்டத்தட்ட 80 அடிகள்
வரை உயர்ந்து வளரும் புளிய மரங்கள், 100 ஆண்டுகள் தாண்டியும்
வாழும் தன்மை கொண்டவை. செடியாக நட்டு வளர்த்தால் அதிகபட்சம் 4 ஆண்டுகளில், பூ பூத்து காய்க்கத் தொடங்கிவிடும்.
புளியில் அடங்கியுள்ள சத்துக்கள்
100 கிராம் புளியில்
கால்சியம் 7%, இரும்புச் சத்து 20%, விட்டமின்
சி 6%, விட்டமின் ஏ 1%, பொட்டாசியம் 13%, நியசின் 12%, பாஸ்பரஸ் 16%, மக்னீசியம்
23%, நார்ச்சத்து 13% சதவீதம்
அடங்கியுள்ளன.
புளியின் ஆரோக்கிய நன்மைகள்
நம்
தென்னிந்திய சமையலைப் பொறுத்த வரை அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருள் புளி. இதுவரை
இந்த புளி வெறும் சுவைக்காக மட்டும் தான் நினைச்சுட்டு இருந்தோம். ஆனால் குழம்பில்
சேர்க்கும் புளியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை
பின்வருமாறு பார்ப்போம்,
வலி நிவாரணியாக செயல்படும்
கை, கால், இடுப்பு என்று உடம்பில் ஏதாவது ஓரிடத்தில்
அடிபட்டு வீங்கினாலோ, சுளுக்கு, பிடிப்பு ஏற்பட்டாலோ புளியை
நன்றாக கரைத்து, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து கூழ்பதத்துக்கு
தயாரித்து, அடிபட்ட இடத்தில் இந்தக் கூழை அளவான சூட்டில் பத்து போட்டால் வலி
குறைந்து வீக்கமும், சுளுக்கும் உடனே சரியாகும்.
நீர்கடுப்பு சரியாகும்
வெயில்
காலங்களில் நீர்க்கடுப்பு ஆண்களை வாட்டி எடுத்துவிடும். அந்த நேரங்களில் ஆண்குறியில
சிலருக்கு கடுமையான எரிச்சலும் வலியும் ஏற்படும். அந்த சமயங்களில் புளியங்கொட்டையை
முழுவதுமாகவோ அல்லது அதன் தோலை மட்டுமோ எடுத்து சாப்பிட்டால் உடனடி குணம்
கிடைக்கும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது
புளி மற்றும் புளிய மரத்து இலைகள் இரண்டும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது.
நாள்பட்ட அழற்சி காரணமாகத் தான் நமக்கு நிறைய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த
நாள்பட்ட அழற்சியை போக்க புளிக்கரைசல் அல்லது புளியை பயன்படுத்தி டீ போட்டு அதில்
தேன் சேர்த்து தினமும் குடித்த வரலாம். நல்ல முன்னேற்றம் தரும்.
இதய ஆரோக்கியத்தை காக்கும்
புளியில் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ப்ளோனாய்டுகள், பாலிபீனால்கள் போன்றவைகள் உள்ளன. இவைகள் நம்ம
உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு
ஆகியவற்றை குறைக்கிறது. நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாகவும்,
பாதுகாப்பாகவும் இருக்கும். இருதயத்தில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக்
கரைப்பதில் புளி மிக வேகமாக செயலாற்றும்.
வயிற்று வலியை குறைக்கும்
உடம்பு
உஷ்ணமாகி வயிற்று வலியால் துடிப்பவர்கள் புளியை தண்ணீரில் ஊறவைத்து பின் நன்றாக
கரைத்து, அதோடு பனைவெல்லம் சேர்த்துக் குடிக்க கொடுத்தால் உடனடி நிவாரணம்
கிடைக்கும்.
வாந்தி குமட்டலை தடுக்கும்
கர்ப்ப
காலத்தில் பெண்கள் பெரும்பாலும் காலை நேர மசக்கையால் அவதிப்படுவர். காலையில் எழுந்ததும்
வாந்தி, குமட்டல், அதிகப் பசி போன்றவை இருக்கும். எதையாவது
சாப்பிட்டால் உடனே வாந்தி வரும். இதை நிறுத்த புளியை நம் முன்னோர்கள் பல
தலைமுறைகளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
எனவே கர்ப்பமான பெண்கள் புளியை சேர்த்துக்
கொள்ளும் போது குமட்டல் வாந்தி ஓரளவுக்கு குறையும். மேலும் கர்ப்ப காலத்தில்
பெண்கள் மலச்சிக்கல் தொல்லையால் பாதிக்கப்படுவர். அதற்கும் புளி ஒரு மலமிளக்கியாக
அமையும். குமட்டலை தடுக்க புளிச்சாற்றை சுவைக்கலாம்.
உடல் உஷ்ணத்தை
குறைக்கும்
புளியம்பூ, புளியம்பிஞ்சு இரண்டையும் தேவையான அளவு எடுத்து அதனுடன் காய்ந்த மிளகாய்,
உப்பு சேர்த்து இடித்து காய வைக்க வேண்டும். இதை ஊறுகாய் போன்று சாப்பாட்டோடு
சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தணிவதோடு நல்ல பசியும் உண்டாகும்.
இத்தனை சிறப்பு
வாய்ந்த புளி இனிப்புகள், பலகாரங்கள், உணவு பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றில்
பெருமளவு பயன்படுகிறது. நாமும் புளியை அளவோடு சாப்பிட்டு நிறைந்த பயன் பெறுவோம்.