-->

தெரிந்த நவராத்திரியும், தெரியாத செய்திகளும்


தெரிந்த நவராத்திரியும், தெரியாத செய்திகளும்


சிவ பெருமானுக்கு சிவராத்திரி இருப்பது போல, அம்பாளுக்கு நவராத்திரி. அதாவது ஈசனுக்கு ஒரே ஒரு இரவு என்றால் அம்பாளுக்கு 9 இரவுகள். இந்த நவராத்திரி ஆனது புரட்டாசி வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும். மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார். அதுவே வெற்றியைத் தரும் தசமி ஆயிற்று. அதாவது விஜய தசமி ஆயிற்று.
 





இதனைக் கொண்டாடும் விதமாக பல கோயில்களில் 'தசரா' என்ற பெயரில் உற்சவங்கள் எல்லாம் கூட நடந்தேறும். பல வீடுகளிலும் கூட கலை கட்டும். அந்தவகையில் 'நவராத்திரி' விழாவை வீடுகளில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் என அழைப்பர். இந்த நவராத்திரி உற்சவத்தில் முதல் மூன்று நாட்கள் துர்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுதல் வழக்கம்.

நவராத்திரி ஆன்மீக ரீதியாக கொண்டாடப் படுவதன் காரணம் : புரட்டாசியும் - பங்குனியும் எமனின் கோரைப் பற்களாகக் கருதப்படுகின்றன. எமனின் பற்களில் சிக்கித் துன்பப்படுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளவே ஒன்பது நாளும் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரியின் நான்கு வகைகள்


1. ஆவணி அமாவாசைக்குப் பிறகு வருவது ஆஷாட நவராத்திரி.

2. புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு வருவது சாரதா நவராத்திரி.

3. தை அமாவாசைக்குப் பிறகு வருவது சியாமளா நவராத்திரி.

4. பங்குனி அமாவாசைக்குப் பிறகு வருவது வசந்த நவராத்திரி.

இந்த நான்கு நவராத்திரிகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது சாரதா நவராத்திரி தான். மேற்கண்ட, இந்த நாட்களில் ஒன்பது மலர்கள், ஒன்பது வகை அலங்காரங்கள், ஒன்பது வகை நிவேதனம் என்ற கணக்கில் அம்பாளை வழிபடுதல் சிறப்பு. அம்பாளை அலங்கரித்து அழகுபடுத்தினால் வாழ்க்கையும் அழகுடன் அமையும் என்பது ஐதீகம்.

ஆஷாட நவராத்திரி

இது ஆனி மாதத்தில் விமர்சையாக அம்பாள் திருத்தலங்களில் கொண்டாடப்படும். இதனை 'ஆஷாட நவராத்திரி' என்பர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில், ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும். ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான். 



பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம். விவசாயத்தின் காரக கிரகங்கள் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும், விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம். இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது. இந்த நவராத்திரியில் வராஹி தேவியையும், சப்த கன்னிகளையும் வழிபடுதல் சிறப்பு. இதனை விவாசாயிகள் குறிப்பாகக் கடைப்பிடிப்பது என்பது அவர்களது வறுமையை போக்கும். செழிப்பைத் தரும்.


சாரதா நவராத்திரி

இது நம் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் கொண்டாடும் நவராத்திரி. வட மாநிலங்களில் துர்கா பூஜையாக இது கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியாக ஒரு காரணம் உண்டு. நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்றும் குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னி ராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி, கலைகளுக்கு உரியவராகவும், புத்திகாரகராகவும் பண்பு நலன்களைத் தருபவராகவும் இருப்பவர். அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலை மகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம். 

இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், ‘அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜய தசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்த நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர். சரஸ்வதிக்கு, சாரதா என்ற பெயரும் உண்டு. கல்வி மட்டுமல்லாமல் செல்வமும், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் கொண்டாடி வழிபடுகிறோம்.

பொதுவாகவே, சாரதா நவராத்திரி என்பது பிரதமையில் தொடங்கி நவமியில் முடியும். இதில் குறிப்பாக அஷ்டமி, நவமி திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ, படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. அத்துடன் அம்பாளின் கதையை கேட்க, கேட்க கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். இதன் பலனாய் பிரிந்தவர்கள் கூட ஒன்று இணைவர். திருட்டு பயம், வீணாகப் பொருள் இழத்தல், நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் என அனைத்துமே அம்பாளை நவராத்திரியில் கொண்டாட விலகி ஓடுமாம். எனினும், நவராத்திரியில் மட்டும் தான் அம்பாளின் கதையை வாசிக்க வேண்டும் என்பது இல்லை. நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை வாசிப்பது மிகச் சிறப்பு.

சியாமளா நவராத்திரி

தை மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரிக்கு 'சியாமளா நவராத்திரி' என்று பெயர். அதாவது தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் இது கொண்டாடப்படுகிறது. சியாமளாவின் அம்சமாக திகழுபவள் மதுரை மீனாக்ஷி அம்மன். அவளையே இந்த நவராத்திரியில் வழிபடுதல் மிகச் சிறப்பு. விருப்பம் கொண்டவர்கள் சாக்ஷாத் அந்த சியாமளா தேவியையே வழிபடுதல் சிறப்பு.

தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரை அம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம். சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திரு அவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.

சியாமளா தேவி

அம்பாளின் இன்னொரு வடிவம் தாம் 'சியாமளா தேவி'. இவளுக்கு 'ஸ்ரீ ராஜ சியாமளா' என்ற பெயரும் உண்டு. அது மட்டும் அல்ல, 'ஸ்ரீமாதங்கி' என்றும், 'மஹாமந்திரிணீ' என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப் புதல்வியாக அவதரித்தருளியவள். தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேதங்கள் இவளை 'மந்திரிணீ' என்று அழைக்கிறது. இதன் பொருள் 'வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை' என்பதாகும். சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி என்ற ஒரு கூற்றும் உண்டு. தேவி பாகவதம் மற்றும் லலிதா சஹஸ்ரநாமத்தின் அடிப்படையில், ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். மொத்தத்தில் இவளது திருநாமத்தைப் போற்றி வழிபடுவதே சியாமளா நவராத்திரி எனப்படும்.

பாரதப் பண்பாட்டைப் பொறுத்தவரையில், வாத்யங்களின் ராஜா வீணை. அதுவே, சப்த சுவரங்களின் ஜீவ நாடி. அதனால் தான் சரஸ்வதி தேவி கூட வீணையுடன் காட்சி தருகிறாள். கச்சபி' என்பது ஸரஸ்வதியின் வீணை. மறுபுறம், 'சியாமளா தேவி அல்லது ராஜ மாதங்கி அல்லது ராஜ ச்யாமளா' கூட சரஸ்வதி தேவியைப் போலவே கையில் வீணையுடன் தான் காட்சி தருவாள். இதில் கவனிக்க வேண்டியது, ஸரஸ்வதி நல்ல வெளுப்பு. இவளே சாம்பல் கறுப்பு. அதனால்தான் சியாமளா' என்று பெயர்.



வசந்த நவராத்திரி 

நம் பெரியவர்கள் வருடத்தை ஆறு ருதுக்களாக பிரித்து உள்ளனர். அதில், இரண்டு இரண்டு மாதங்களாக ருதுக்கள் அமையும். அந்த ருதுக்களில் 'ரிதூநாம் குஸுமாகர' என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்த ருது. பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்த ருது. வஸந்த ருதுவே வசந்த காலம். வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம். வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம். இப்படியான ஒரு காலத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் 'நவராத்திரி' தான் வசந்த நவராத்திரி.

இது, பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். மறுநாள் ஆகிய பிரதமை - தெலுங்கு வருடப்பிறப்பாகிய யுகாதி பண்டிகை அமையும். இந்த நவராத்திரி ஸ்ரீ ராம நவமியுடன் முடியும். பொதுவாக வட இந்தியாவிலும், தென் இந்தியாவில் சிற்சில கோயில்களில் மட்டுமே நடத்தப்படக் கூடியது இந்த நவராத்திரி. இந்த நவராத்திரி பொதுவாக ஆலயங்களில் மட்டுமே நடக்கக் கூடியது. மற்றபடி, நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தின் படி,

1. வசந்த நவராத்திரியை 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் செழிப்படையும்.

2. ஒரு பட்சம் நாட்கள் அதாவது 15 நாட்கள் கொண்டாடினால் வேண்டிய வரங்கள் கிடைக்கப்பெறும்.

3. மண்டல நாட்கள் எனப்படும், பங்குனி அமாவாசை முதல் சித்ரா பெளர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது என்பது சகல காரியங்களிலும் வெற்றியைத் தரும்.
 

Previous Post Next Post